முல்லைத்தீவு மாவட்டத்தின், முள்ளியவளை நாவல்காட்டு கிராமத்தில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சம், கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் காணாமற் போனவரினுடையது என்று சட்ட மருத்துவ வல்லுநர்களின் நிபுணத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு முல்லைத்தீவு வைத்தியசாலையில் எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே படப்பிரதியை வைத்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் முள்ளியவளையைச் சேர்ந்த தயானந்தன் (46) என்பவருடையது என்று நீதிமன்றுக்கு சட்ட மருத்துவ வல்லுநர்களால் அறிக்கையிடப்பட்டுள்ளது.
முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவல்காட்டு கிராமத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து உருக்குலைந்த சடலம் ஒன்று 2020 டிசெம்பர் 30ஆம் திகதி மீட்கப்பட்டது.
மாடு மேய்ப்பதற்காக அந்தப் பகுதிக்குச் சென்ற ஒருவர் கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதை தொடர்ந்து எட்டிப் பார்த்துள்ளார்.
அதன்போது உருக்குலைந்த நிலையில் சடலம் இனம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து கிராம சேவகருக்கு தகவல் வழங்கப்பட்டு, பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.
பொலிசார் அங்கு சோதனையிட்டதில் ஆண்கள் அணியும் ரீ சேர்ட்டுடன் சடலம் காணப்பட்டது.
டிசம்பர் 31ஆம் திகதி முல்லைத்தீவு நீதிவான் பா.லெனின் குமார் முன்னிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.
அந்த பகுதி சட்டவிரோத மரக்கடத்தல் காரர்களின் கூடாரம் என்பதால், மரக்கடத்தல்காரர்களினால் செய்யப்பட்ட கொலையா என்ற அச்சமும் எழுந்திருந்தது.
மனித எச்சங்கள் மன்னார் சட்ட மருத்துவ வல்லுநர் செல்லையா பிரணவன், முல்லைத்தீவு வைத்தியசாலை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவ ஆகியோர் தலைமையிலான குழுவினரால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட போது, நெஞ்சில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
அதனையடுத்து மேலதிக ஆய்வுகளின் போது 2019ஆம் ஆண்டு முல்லைத்தீவு வைத்தியசாலையில் எடுக்கப்பட்ட கதிர்வீச்சு படப்பிரதி ஒன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அந்த படப்பிரதியில் முழங்கால் பகுதியில் துப்பாக்கி ரவை பாய்ந்து எலும்பில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
அந்த கதிர்வீச்சு பிரதியில் உள்ளவாறு முள்ளியவளையில் மீட்கபட்ட மனித எச்சங்களில் முழங்கால் எலும்புப் பகுதியில் பாதிப்பு இருந்துள்ளது. அவை ஒத்து நோக்கப்பட்டு ஆய்வு செய்ததில் உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, 1996ஆம் ஆண்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முழங்காலில் படுகாயமடைந்த முள்ளியவளையைச் சேர்ந்த தயானந்தன் (46) என்பவருடைய எச்சங்களே அவையென உறுதிசெய்யப்பட்டது.
அவர் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காணாமற்போயிருந்தார்.
மேலதிக உறுதிப்படுத்தலுக்காக தாயனந்தனின் எலும்புப் பகுதியின் மாதிரிகளும் அவருடைய தாயாரின் மாதிரிகளும் மரபணுப் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டவுள்ளன.
சட்ட மருத்துவ வல்லுநர்களின் அறிக்கை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை முன்வைக்கப்பட்டது.
அதனை ஆராய்ந்த நீதிவான், கொலை செய்தோரைக் கைது செய்ய விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.