அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து வெளியேறினார்.
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோர் மோதினர். மிகவும் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் நவோமி ஒசாகா அசுரத்தனமாக விளையாடினார்.
இதில் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் செரீனா வில்லியம்சை எளிதாக வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தார் நவோமி ஒசாகா. இதன்மூலம் நான்காவது தடவையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். டென்னிஸ் போட்டிகளில் 23 முறை ஒற்றையர் பட்டங்களை வென்ற செரீனா வில்லியம்ஸ் 24ஆவது முறையாகப் பட்டம் வென்று மார்கரட் கோர்ட்டின் சாதனையைச் சமன் செய்ய நினைத்திருந்தார்.
இன்றைய தோல்வியால் தனது எண்ணம் நிறைவேறாமல் போனதால் பேட்டியளிக்கும்போது, ஆட்டத்தில் தான் பல தவறுகளைச் செய்துவிட்டதாகவும் இன்று பெரிய தவறைச் செய்துவிட்டதாகவும் கூறிக் கண்ணீர் விட்டு அழுதபடியே வெளியேறினார்.
மற்றொரு அரையிறுதிச் சுற்றில், அமெரிக்காவின் ஜெனிபா் பிராடியும் செக் குடியரசின் கரோலினா முசோவாவும் மோதினார்கள். இதில் ஜெனிபர் பிராடி, 6-4, 3-6, 6-4 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் ஜெனிபர் பிராடி முதல்முறையாக இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.