மட்டக்களப்பு சின்ன ஊறணி சந்தியில் பக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவர் உயிரிழந்ததுடன் பெண் ஒருவர் படுகாயம் அடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று புதன்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் கல்முனைக்குடி 9 ஆம் பிரிவு வீட்டுத்திட்ட வீதியை அண்டி வசிக்கும் 63 வயதுடைய இராசாத்தம்பி முஹம்மத் பஸில் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது ஊறணியில் இருந்து திருப்பெரும்துறையை நோக்கி சென்று கொண்டிருந்த பக்கோ இயந்திரம் கடக்கும் போது மோட்டர்சைக்கிளும் பக்கோ இயந்திரமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவரும் அதில் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த பெண்ணும் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனh வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் பக்கோ இயந்திரத்தை செலுத்திய சாரதி கைதுசெய்யப்பட்டிருப்பதுடன் சம்பவம் பற்றிய விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.