தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந்த் மது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டதாக ஈ.பி.டி.பியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று யாழ் மாநகரசபை அமர்வின் போது, ப.தர்சானந்த் மதுபோதையில் கலந்து கொண்டிருப்பதாக ஈ.பி.டி.பியினர் குற்றம்சாட்டினர். அவர் மறுத்தார். அப்படியானால் அவர் வைத்திய பரிசோதனையை மேற்கொள்ளலாமென முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரியும் அங்கிருந்ததால் அவர் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளலாமென ப.தர்சானந்த் கூறினார்.
எனினும், சுகாதார வைத்திய அதிகாரி அதை செய்ய முடியாது, சட்ட வைத்திய அதிகாரியே அதை செய்யலாமென அவர் விளக்கமளித்தார்.
இதையடுத்து, சபை அமர்விலிருந்து ப.தர்சானந்த் வெளியேறினார்.
அவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் சென்றுள்ளார். தனது வைத்திய பரிசோதனைக்காக சிபாரிசு செய்யுமாறு, மாநகர வைத்திய அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார்.
எனினும், இப்படியான சூழ்நிலைகளில் தாம் பரிசோதனை செய்ய முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மீண்டும் மாநகரசபை அமர்வில் கலந்து கொண்ட தர்சானந்த், சபை நிறைவடையும் வரை அமர்வில் கலந்து கொண்டார்.
இன்றைய அமர்வில், முதல்வர் வி.மணிவண்ணன் தனது சொந்த சாரதியை பயன்படுத்த அனுமதி கோரி பிரேரணை சமர்ப்பித்திருந்தார். எனினும், முன்னைய முதல்வர் ஆர்னோல்ட்டை போலவே இவரும் தனிப்பட்ட நலன்களை பெற செயற்படுகிறார் என ப.தர்சானந்த் காரசாரமாக விமர்சித்துக் கொண்டிருந்த போதே, ஈ.பி.டி.பி இந்த குற்றச்சாட்டை சுமத்தியது.
வி.மணிவண்ணனை காப்பாற்றவே ஈ.பி.டி.பிதரப்பு தன் மீது அவதூறு சுமத்தியதாக ப.தர்சானந்த் குற்றம்சுமத்தியுள்ளார்.