‘ருத்ர தாண்டவம்’ படத்தில் வில்லனாக நடிக்க கெளதம் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மோகன்.ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் வெளியான படம் ‘திரெளபதி’. கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியான படங்களில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டிய படம் என்ற பெயரைப் பெற்றது.
தற்போது தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார் மோகன்.ஜி. ‘ருத்ர தாண்டவம்’ என்ற பெயரில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ரிஷி ரிச்சர்ட், த்ரிஷா குப்தா, தம்பி ராமையா, விக்கி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் வில்லன் யார் என்பதில் படக்குழு ரகசியம் காத்து வந்தது.
இந்நிலையில் பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை காலையில் வெளியிடப்பட்டது. மாலை 6 மணிக்கு அடுத்த முக்கியமான அறிவிப்பு என்று படக்குழு தெரிவித்தது. அதன்படி ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் வில்லனாக இயக்குநர் கெளதம் மேனன் நடிக்கவுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அவர் வாதாபிராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார்.
‘ருத்ர தாண்டவம்’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்து, இரண்டாம்கட்டப் படப்பிடிப்புக்குப் படக்குழு தயாராகி வருகிறது. ஒளிப்பதிவாளராக ஃபரூக், இசையமைப்பாளராக ஜூபின் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ‘திரெளபதி’ படத்தைத் தயாரித்த ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை 7ஜி ஃபிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார்.