2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் பரபரப்பான ஆட்டமாக அமைந்தது. ஒரே நாளில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிந்தது. இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புடன் 249 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ரோஹித், புஜாரா களத்தில் உள்ளனர்.
இன்றைய ஆட்டம் இங்கிலாந்துக்கு மோசமாக அமைந்தது. வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்து ஓல் அவுட்டானது இங்கிலாந்து. இதனால் இந்தியா 195 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
முதல் டெஸ்ட் போட்டியில் அவமானகரமான தோல்வியைச் சந்தித்த இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. சுழல் பந்துக்குத் தோதான மைதானம் என்பதால் கூடுதலாக குல்தீப் யாதவ், அக்சர் படேல் சேர்க்கப்பட்டனர்.
முதலில் ஆடிய இந்திய அணி வலுவான அடித்தளத்துடன் 329 ரன்களில் ஓல் அவுட் ஆனது. ரோஹித் ஷர்மா 161 ரன்கள் எடுத்தார். ரஹானே, ரிஷப் பந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடுத்து இன்று காலையில் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்துக்கு இன்று காலை முதலே பேரிடியாக அடுத்தடுத்து விக்கெட்டுகள் பறிபோயின.
காலையில் விக்கெட்டுகள் விழ ஆரம்பித்ததும் தனது அதிரடி மூலம் ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளினார் ரிஷப் பந்த். அவருடன் யாரும் இணையாக நிற்காததால் எதிர்முனையில் விக்கெட்டுகள் சரிய ரிஷப் பந்த் மட்டும் நொட் அவுட்டாக 58 ரன்களைச் சேகரித்திருந்தார். இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து முதல் இன்னிங்ஸை உற்சாகத்துடன் தொடங்கிய இங்கிலாந்து தொடர்ந்து சரிவைச் சந்தித்தது. முதல் ஓவரிலேயே விக்கெட் விழ நிதானமாக ஆட வேண்டும் என எண்ணிய இங்கிலாந்து, 7 ஓவர்கள் கடந்த நிலையில் 16 ரன்கள் இருந்தபோது இரண்டாவது விக்கெட்டை இழந்தது. அஸ்வின் வீசிய பந்தில் சிப்லி கட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த கப்டன் ரூட் கலக்குவார், நிதானமாக நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 136 ரன்களை ஸ்ட்ரைக் ரேட்டாக வைத்து, முதல் இன்னிங்ஸில் இந்தியாவைக் கலங்கடித்தவர். ஆனால், அவர் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அக்சர் படேல் வீசிய பந்தில் தனது வழக்கமான வெற்றிகரமான ஸ்வீப் ஷொட்டை ஆடும்போது கட்ச் கொடுத்து வெளியேறினார்.
அவரது விக்கெட்டை அக்சர் படேல் எடுத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட் கணக்கைத் தொடங்கினார். அதன் பின்னர் வந்த பென் ஸ்டோக்ஸ், டான் லாரன்ஸுடன் இணைந்து ஆடினார். ஆனாலும், இந்திய அணியின் கடுமையான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டான் லாரன்ஸ் அஸ்வின் வீசிய பந்தில் கில்லிடம் கட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் எடுத்த ரன்கள் 9 மட்டுமே.
அடுத்து வந்த போப் மட்டுமே ஒரு பக்கம் நிலைத்து ஆட ஸ்டோக்ஸ் அஸ்வின் பந்தில் கிளீன் போல்டாகி அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 18 மட்டுமே. அடுத்து களம் இறங்கிய ஃபோக்ஸ் நிலைத்து ஆடினார். சிராஜுக்கு முதல் ஓவரைக் கொடுக்க முதல் ஓவர் முதல் பந்திலேயே போப், ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து மொயின் அலி, அக்சர் பந்தில் முதல் ஸ்லிப்பில் ரஹானேவிடம் கட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டோன் 5 பந்துகள் மட்டுமே ஆடிய நிலையில், 1 ரன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லீச், ஃபோக்ஸுடன் இணைந்து நிதானமாக ஆடினார். ஆனாலும் பலன் அளிக்கவில்லை. 5 ரன்கள் எடுத்திருந்தபோது இஷாந்த் சர்மா பந்தில் ரிஷப் பந்த்திடம் கட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.