லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் ஜூன் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் மற்றும் பிரதிவாதி வழக்சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார். அந்த திகதிக்கு முன்னர் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் உண்மைகளை தெரிவிக்குமாறும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்தில் விமானங்களை வாங்கியது தொடர்பாக நடந்து வரும் விசாரணை தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
தேசிய விமான நிறுவனத்தின் தலைவராக இருந்த காலத்தில் அவர் செய்ததாகக் கூறப்படும் மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
ஜனவரி 22, 2014 அன்று மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கொழும்புக்கு பறக்க திட்டமிடப்பட்டிருந்த UL 319 விமானத்தின் இலக்கை மாற்றியதன் மூலம் அரசாங்கத்திற்கு 4,512 அமெரிக்க டொலர் இழப்பை ஏற்படுத்தியதாக விக்ரமசிங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் மீதான இரண்டாவது குற்றச்சாட்டு, UL 563 விமானத்தில் இருந்து 75 பயணிகளை இறக்கி அரசாங்கத்திற்கு 19,160 அமெரிக்க டொலர் இழப்பை ஏற்படுத்தியதாகும்; இந்த பயணிகள் மாலத்தீவிலிருந்து இலங்கைக்கு வந்து ஜனவரி 26, 2014 அன்று UL 563 இல் பிரான்சுக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தனர். டிசம்பர் 19, 2014 அன்று கட்டுநாயக்காவில் உள்ள 18வது போஸ்ட் மைதானத்தில் நடைபெற்ற அப்போதைய ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசாங்க நிதியில் இருந்து ரூ. 1,250,000 செலவிட்டதாகவும் விக்ரமசிங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷவின் மூத்த சகோதரர் ஆவார்.



