முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டு இராணுவ முகாமிலிருந்த சிப்பாய் ஒருவருக்கு கஞ்சா, கசிப்பு கொடுத்து, முகாமுக்குள் திருடிய இளைஞர் குழுவொன்றை இராணுவத்தினர் பிடித்து தாக்கிய போது, தப்பியோடிய இளைஞன் ஒருவர், முத்துஐயன்கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில்- எந்த தர்க்கநியாயமுமில்லாமல் இலங்கை தமிழரசு கட்சி செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்த கதவடைப்பை ஆதரிக்கலாமா என்ற குழப்பத்தில் ரெலோ தலைமை உள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அங்கத்துவக்கட்சியான ரெலோ, கதவடைப்பை ஆரிப்பதா அல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (17) காலை 10 மணிக்கு இணையவழியில் நடைபெறவுள்ளது.
சுமந்திரன் அறிவித்த கதவடைப்புக்கு பரவலான எதிர்ப்பே காணப்படுகிறது. வடக்கு கிழக்கின் பெரும்பாலான பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கவுள்ளன. போக்குவரத்து, ஏனைய பணிகள் வழக்கம் போல இயங்கவுள்ளன.
வவுனியா வர்த்தகர் சங்கம் கதவடைப்பை ஆதரிக்க முடியாது என துணிச்சலாக கூறிவிட்டது. யாழ் வணிகர் கழகம் பகிரங்க அறிவித்தல் விடுக்கவில்லையே தவிர, கதவடைப்புக்கு ஆதரவு கோரிய யாழ் முதல்வரின் முகத்திலறைந்தாற் போல, கதவடைப்பை ஆதரிப்பதில்லையென கூறிவிட்டார்கள். கிளிநொச்சி வர்த்தகர் சங்கம், சுமந்திரனின் “மனம் நோகாமல்“ காலை 10 மணிக்கு பின்னர் கடைகளை திறப்பதாக கூறியது. ஆனால் வழக்கம் போல கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளனர்.
மூவின வர்த்தகர்களும் கலந்துள்ள மன்னார், அம்பாறை, திருகோணமலை பற்றி பேசவே தேவையில்லை. மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் வழமை போல நிலைமையிருக்கும். மட்டக்களப்பின் சில பகுதிகள், அம்பாறையின் ஓரிரு தமிழ் கிராமங்கள், முல்லைத்தீவில் ஓரளவு கடைகள் பூட்டப்படலாம்.
முத்துஐயன்கட்டில் தமிழ் இளைஞன் இறந்ததும், இராணுவத்தினரால் தகரம் எடுக்க வருமாறு அழைக்கப்பட்டு, அவர் இராணுவத்தினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக ஆரம்பத்தில் தவறான தகவல் பரவ- இந்த விவகாரத்தை ஏனைய தமிழ் கட்சிகள் பயன்படுத்தப் போகின்ற, அதற்கு முன்னர் நாம் பயன்படுத்த வேண்டும் என தவறாக கணக்கிட்டு, சுமந்திரன் அவசர கதியில் கதவடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
சுமந்திரனின் “பந்திக்கு முந்தும்“ அணுகுமுறை, அவரை நெருக்கடிக்குள் தள்ளிவிட்டது.
ஆனால் ஏனைய தமிழ் கட்சிகள் இந்த விடயத்தில் நிதானத்தை கடைப்பிடிப்படை பாராட்டலாம்.
முத்துஐயன்கட்டு சம்பவத்தை நன்றாக அவதானித்தால்- இதில் கதவடைப்பு நடத்த எந்த தர்க்க நியாயமுமில்லை. இளைஞன் இராணுவத்தால் அடித்த காயங்களினால் இறக்கவில்லையென்பதை பிரேத பரிசோதனை அறிக்கை உறுதிசெய்கிறது. சம்பவம் நடந்த போது, இளைஞன் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்தியிருந்ததும் உறுதியாகியுள்ளது.
இந்த பின்னணியில்- கதவடைப்பு நடத்துவது, இராணுவ முகாமுக்குள் திருட அனுமதியுங்கள் என்று கோருவதை தவிர வேறு என்ன பெறுமானத்தை கொண்டிருக்கும்?
இந்த கதவடைப்பு போதைப்பொருள் குற்றங்களையும், தமிழ் தேசிய வீரப்பிரதாபங்களாக மாற்றும் மிக மோசமான முன்னுதாரணமாகவும் மாறும்.
உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் கொடுத்து திருட சென்றவர். அவரது மரணவீட்டை ஒரு விடுதலை வீரனின் மரணவீடாக நமது அரசியல்வாதிகள் மாற்றியிருந்தனர்.
இவர்கள் தாம் என்ன செய்கிறோம் என்ற வெட்கம் சிறிதுமின்றி, வாக்கு அரசியலுக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள்.
இந்த அரசியல் போக்கினால்தான் தமிழ் சமூகம்- மூடத்தனமான அரசியலை தொடர்கிறது.
பொய் என தெரிந்தாலும், அதை சொல்வது இனத்துக்கு நல்லது என நினைத்து, அனேக விடயங்களை பொய்யாக கூறிப்பழக்கப்பட்ட இனம் இது. அதனால்தான் நம்மால், நமது சமூகத்தை தவிர வேறெந்த தரப்பையும் வெற்றிகொள்ள முடியவில்லை.
பொய் சொல்வதை ஒரு இனஉணர்வாக ஏற்ற சமூகத்தில்- அரசியல்வாதிகள் எப்படியிருப்பார்கள்?
இதில் ஆகப்பிந்திய அவதாரம்தான் சுமந்திரனின் தற்போதைய நடவடிக்கைகள்.
மக்களை வழிநடத்தும் பொறுப்பு தமக்கிருப்பதாக நமது அரசியல்வாதிகள் நினைப்பதேயில்லை. ஏதாவதொரு விவகாரத்தில் மக்கள் உசுப்பேறினால்- அது பிழையென தெரிந்தாலும்- அதை ஆதரிப்பவர்கள் நமது அரசியல்வாதிகள். கதவடைப்பை இதுவரை ஆதரிக்காத தரப்பினரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், இப்போது, அவர்கள் காட்டும் நிதானம் பாராட்டப்பட வேண்டியது.
கதவடைப்பை இதுவரை ஆதரிக்காத தரப்புக்குள்- நாம் மேலே சொன்ன குரங்குவித்தையை அதிகமாக காட்டக்கூடிய கட்சியென்றால் அது- ரெலோதான். அவர்களுக்கும் எந்த கொள்கையுமில்லை. ஒரு விவகாரத்தில் அரசியல் செய்யலாமென்றால் அதை தாராளமாக பயன்படுத்துவார்கள்.
இப்படித்தான் சிலகாலத்தில் முன்னர், செல்வம் அடைக்கலநாதன் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சுவரொட்டிகள் ஒட்டினார்கள். அந்த சுவரொட்டி ஒட்டிய நாளின் பின்னர், ஒருநாள் கூட செல்வம் அடைக்கலநாதன் மறந்தும் கூட ஒருவேளை உணவை தவிர்த்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.
இப்படி அரசியலில் விளையாட்டுத்தனமாக நடந்த வரலாறு ரெலோவுக்கு நிறைய உள்ளது.
ஒரு பிரச்சனையில்- அதன் அனைத்து பக்கங்களையும் ஆராய்ந்து, நிலைப்பாடு எடுத்து, மக்களை வழிநடத்தும் பொறுப்பு கட்சிகளுக்கு உண்டு.
நல்லவேளையாக- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பெரும்பாலான கட்சிகள் கதவடைப்பை ஆதரிக்கவில்லை. ரெலோ விரும்பினால்- அவர்களின் கட்சியாக அறிவிக்கப்பட்டும் என்றுதான் இன்றைய கூட்டத்தில் சொல்லப்பட அதிக வாய்ப்புண்டு.
அரசியல் விளையாட்டுக்களில் ஈடுபடும் ரெலோ- கதவடைப்பில் கூட்டணியில் குளர்காயாமல், தனது கட்சியாக அறிவிக்கும் துணிச்சல் உள்ளதா என்பது இன்று தெரிய வரும்.




