இலங்கை ஜனாதிபதி வருகையை எதிர்த்து பேர்லினில் வெளிநாட்டு அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கை தூதரகத்தின் பயமுறுத்தும் முயற்சிகளினையும் மீறி, பேர்லின் நகரில் உள்ள வெளிநாட்டு அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தமிழர்களுடன் மற்ற மக்களும் கலந்து கொண்டு தங்களின் ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர்.
இலங்கை ஜனாதிபதி வருகையையொட்டி ஈழத்தமிழர் களின் உண்மையான நிலைமையை வெளிப்படுத்தும் துண்டுப்பிரசுரங்கள் யேர்மன் மொழியில் பகிரப்பட்டன மற்றும் உரைகளும் நிகழ்த்தப்பட்டன.
யேர்மன் பாராளுமன்ற உறுப்பினரும் “Die Linke ” கட்சியைச் சேர்ந்தவருமான Ferat Koçak இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு தமிழர்களுக்கு தனது உறுதுணையைக் காண்பித்ததோடு ஈழத்தமிழர்கள் சார்ந்த யேர்மன் நாட்டின் மௌனத்தையும் கண்டித்தார்.
தொடர்ந்து குர்த் சமூக பிரதிநிதிகளும் மனித உரிமைப் செயற்பாட்டாளர்களும் தங்களது உரைகளை நிகழ்த்தினார்கள். இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து அக்கறை தெரிவித்தனர்.
கால நிலை சீராக இல்லாத நிலமையிலும் போராட்டம் உணர்வுபூர்வமாகவும் உற்சாகமாகவும் நடைபெற்றது.
இன்று Schloss Bellevue அருகே இன அழிப்பு குறித்த கண்காட்சி நடைபெற உள்ளது – அங்கு இலங்கை ஜனாதிபதி அனுரா சிவப்புக் கம்பள வரவேற்புடன் வரவேற்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



