உள்ளூராட்சிசபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு பிரதியுபகாரமாக, சில சபைகளையேனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்க இலங்கை தமிழ் அரசு கட்சி மறுத்துள்ளது. இதையடுத்து, உள்ளூராட்சிசபைகளில் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு ஆதரவளிப்பது என்ற முடிவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மாற்றிக் கொண்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று (25) வவுனியாவில் நடந்தது.
இதன்போது, உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைக்க வாய்ப்புள்ள தமிழ் தேசிய கட்சியொன்றுக்கு ஆதரவளிப்பது, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ள சபைகளில் அதற்கான முயற்சியை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னர், இலங்கை தமிழ் அரசு கட்சியை ஆதரிப்பது என கொள்கையளவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முடிவு செய்திருந்தது. ஆரம்ப சுற்று பேச்சுக்களை இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கொண்டிருந்தார். இதன்போது, சில சபைகளில் ஆட்சியமைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கோரியிருந்தது.
தனிப்பட்ட பயணமாக அபுதாபி புறப்பட்டதால், நாடு திரும்பிய பின்னர் இது குறித்து பேசுவதாக அவர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரிடம் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குள், கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுடன் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு, இலங்கை தமிழ் அரசு கட்சி உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைக்க நல்லெண்ண அடிப்படையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுள்ளார். இதன் அர்த்தம்- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்கு எந்த சபையையும் ஒதுக்க முடியாது என்பதாகும்.
தமக்கு சபைகள் ஓரிரண்டையேனும் தராவிட்டால், தாம் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ள சபைகளில் அதற்கான முயற்சியை மேற்கொள்வோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர், சீ.வீ.கே.சிவஞானத்திடம் தெரிவித்துள்ளனர்.
உங்கள் முடிவின்படி செயற்படுங்கள் என சீ.வீ.கே. பேச்சை முடித்துக் கொண்டார்.
எம்.ஏ.சுமந்திரன் நேற்று நாடு திரும்பினார். அவரும், சபைகளை விட்டுத்தர தமது கட்சிக்காரர்கள் மறுக்கிறார்கள் என்ற சாரப்பட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரிடம் தெரிவித்தார். இருப்பினும், தான் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சி எந்த தெளிவான நிலைப்பாட்டையும் இதுவரை எடுக்காத நிலையில்- அடுத்த வாரம் உள்ளூராட்சிசபைகளின் தலைவர்கள் தெரிவு நடக்கவுள்ள பின்னணியில்- இனியும் தாமதிக்க முடியாது என்ற சூழலில்- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடந்தது.
இதன்போது, உள்ளூராட்சிசபைகளில் ஏதாவதொரு தமிழ் தேசிய கட்சி ஆட்சியமைக்க ஆதரிப்பது, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆட்சியை பிடிக்கக்கூடிய சபைகளில் அதற்கான முயற்சியை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை மாற்றி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனும் இணைந்து ஆட்சியமைப்பது என்ற புதிய நிலைப்பாட்டை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எடுத்துள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் முக்கிய பல சபைகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இணைந்து கைப்பற்றவுள்ளன.
இன்றைய நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் பின்னர், செய்தியாளர் சந்திப்பில்- “தென்னிலங்கை கட்சிகளுடன் பேச்சு நடத்துகிறீர்களா?“ என கேள்வியெழுப்பப்பட்ட போது, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பதிலளித்தார். “நாம் எந்த தென்னிலங்கை கட்சியின் ஆதரவையும் கோரவில்லை. பேச்சு நடத்தவில்லை. ஆனால், சபைகளில் ஆட்சியமைக்கும் போது எந்த கட்சியும் ஏதாவதொரு நிலைப்பாட்டை எடுத்து வாக்களிப்பது ஜனநாயக உரிமை. எமக்கு வாக்களிக்காதீர்கள் என நாம் யாரையும் கோர முடியாது“ என்றார்.
வடக்கில் தேசிய மக்கள் சக்தியினர் சபைகளை கைப்பற்ற முடியாவிட்டாலும், இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது. அந்த சபைகளில், இலங்கை தமிழ் அரசு கட்சி அல்லாத வேறொரு தமிழ் கட்சியின் வேட்பாளர் களமிறங்கினால் தேசிய மக்கள் சக்தி, அவர்களை ஆதரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த சூழல், இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தவுள்ளது.
இதேநேரம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் தவிசாளர் போட்டியில் களமிறங்கினால், தேசிய மக்கள் சக்தி அனேகமாக ஆதரவளிக்குமென்ற சூழலே உள்ளது. அப்படியொரு நிலைமையேற்பட்டு, தமிழரசு கட்சி போட்டியில் தோல்வியடைந்தால், தென்னிலங்கை கட்சியுடன் இணைந்து எம்மை வீழ்த்தி விட்டார்கள் என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, மக்களிடம் அனுதாபத்தை பெறலாம் என தமிழ் அரசு கட்சியின் உயர்மட்டத்தில் அபிப்பிராயம் உள்ளது.
எனினும், தேசிய மக்கள் சக்தியிடம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இதுவரை எந்த பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை. ஆனால், தமிழ் அரசு கட்சிக்கு போட்டியாக அவர்களும் வேட்பாளரை நிறுத்தினால், தமிழ் அரசு கட்சியை வீழ்த்த, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி- தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட்டை, தேசிய மக்கள் சக்தி ஆதரிக்கும்.
இது உள்ளக டீலால் நடக்கப் போகும் சம்பவமல்ல. இலங்கை தமிழ் அரசு கட்சியின் புத்திசாலித்தனமற்ற முடிவால் நிகழப்போகும் சம்பவமாகும்.
இதேவேளை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் உள்ளக மோதலும், தவிசாளர் தெரிவில் எதிரொலிக்கவுள்ளது. யாழ் மாவட்டத்தின் பல உள்ளூராட்சிசபைகளில் சி.சிறிதரன் ஆதரவு அணியினரும் உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர். அவர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருடன் திரைமறைவில் பேச்சு நடத்தி வருகிறார்கள்.
சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களுடன் பேசி, இரகசிய வாக்கெடுப்பை ஒழுங்கு செய்யுமாறும், தாமும் உங்களுக்கே வாக்களிக்கப் போகிறோம், தமிழ் அரசு கட்சி (சுமந்திரன் அணி) நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம் என பேச்சு நடத்தி வருகிறார்கள்.
இதை மோப்பம் பிடித்த கட்சி தலைமை, அண்மையில் வெற்றிபெற்ற வேட்பாளர்களை நேரில் அழைத்து, யாரும் இரகசிய வாக்கெடுப்பை ஆதரிக்கக்கூடாது என கண்டிப்பான கட்டளையிட்டுள்ளது. எனினும், யாழ்ப்பாணத்தின் பல சபைகளிலேயே இரகசிய வாக்கெடுப்பை கோர, இலங்கை தமிழ் அரசு கட்சியை விட, எதிர்தரப்பில் அதிக உறுப்பினர்கள் உள்ளனர். இதனால், சிறிதரன் அணியினர் பகிரங்கமாக இரகசிய வாக்கெடுப்பை எதிர்த்தாலும், இரகசிய வாக்கெடுப்பு தரப்பே வெற்றிபெறும். பின்னர், அவர்கள் விரும்பியதை போல, இரகசிய வாக்கெடுப்பில் தமக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களிக்கலாம்.
இதுவும், இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தவுள்ளது.
எம்.ஏ.சுமந்திரன் நாடு திரும்பியுள்ள நிலையில், அவர் தீவிர முயற்சியெடுத்து, கட்சியை சமரப்படுத்தி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தினால் தவிர, தற்போதைய முடிவில் மாற்றம் ஏற்பட வேறு எந்த வாய்ப்புக்களும் இல்லை.



