ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்த குழுவில் இருந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த தொழிலதிபர், நாட்டின் முன்னணி இரும்புத் தொழில் நிறுவனத்தில் முதலிடம் வகிப்பவர் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொழிலதிபர் தற்போது ஆபிரிக்க நாடொன்றில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி மாளிகைக்குள் வலுக்கட்டாயமாக பிரவேசித்தமை இந்த வர்த்தகர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு.
ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த தொழிலதிபர் தனது கையடக்கத் தொலைபேசியில் செல்பி எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் தற்போது தொழிலதிபருக்கு எதிரான சாட்சியமாக மாறியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி இல்லத்தில் அத்துமீறி நுழைந்து சொத்துக்களை திருடியமை தொடர்பில் இதுவரை 15 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து சேதப்படுத்தியதாக கூறப்படும் 45 பேரை இதுவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து கதிரையில் இருந்தது, சாப்பிட்டது என்ற குற்றச்சாட்டில் பொதுமக்கள் கைது செய்யப்படுவதாக நேற்று தொழிற்சங்கவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஊடகங்களிடம் குற்றம்சாட்டியதுடன், பாராளுமன்றத்திற்குள் பொதுச்சொத்துக்களிற்கு சேதம் ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதோ, மத்திய வங்கி ஊழல் உள்ளிட்ட நாட்டை படுகுழிக்குள் தள்ளிய ஊழல்கள் குறித்தோ யாரும் தண்டிக்கப்படவில்லையென குற்றம்சுமத்தியிருந்தார்.