25.9 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இந்தியா முக்கியச் செய்திகள்

பேரறிவாளனுக்கு ஜாமீன்; ராஜீவ் கொலை வழக்கை முடிவுக்கு கொண்டுவர உச்ச நீதிமன்றம் முயற்சி: வழக்கறிஞர் பிரபு தகவல்

“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இறுதி விசாரணை நடத்தி, வழக்கை முடிவுக்கு கொண்டு வரவே உச்ச நீதிமன்றம் முயற்சிக்கிறது” என்று பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (9) விசாரணைக்கு வந்தது.

அப்போது பேரறிவாளன் தரப்பில், கடந்த 30 ஆண்டு காலமாக பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறார். இதுவரை மூன்று முறை பரோலில் வெளியே வந்துள்ள அவர், சிறை நடத்தை விதிமுறைகளை முறையாகக் கடைபிடித்து உள்ளார். அவர்மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அப்போது மத்திய அரசு தரப்பில், ஏற்கெனவே அரசுத் தரப்பில் பேரறிவாளனுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு ஜாமீன் வழங்க கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

இது குறித்து பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு கூறியது: “வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் ஏற்கெனவே பரோலில் இருப்பதால், வழக்கு விசாரணை தாமதமாகும் என்று நீதிபதிகள் காலையில் தெரிவித்தனர். அப்போது, பரோலில் இருப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து எடுத்துரைத்தோம். அதன் அடிப்படையில், விடுதலை வழக்கை இறுதியாக விசாரிப்பதற்கு முன்பாக, ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிபதிகள் முடிவு செய்திருந்தனர்.

அதற்கு மத்திய அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ’மகாத்மா காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய கோட்சேவுக்கே 14 ஆண்டுகளில் நிவாரணம் வழங்கிவிட்டனர். ஆனால், இந்த வழக்கிற்காக மத்திய அரசு சட்டத்தையே மாற்ற நினைக்கிறது. 302வது சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரமிருக்கிறது எனக் கூறுவது சரியானதல்ல’ என தமிழக அரசுத் தரப்பில் வாதிட்டார். பேரறிவாளன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணனும் வாதங்களை முன்வைத்தார்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, கடந்த 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருமே சிறையில் உள்ளனர். இதுவரை இவர்கள் யாருக்குமே ஜாமீன் வழங்கப்படவில்லை. சிலருக்கு பரோல் மட்டும் வழங்கப்பட்டது. அதுவும் குடும்ப உறுப்பினர்கள் யாராவது இறந்தால் மட்டும் அல்லது, மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின்னர்தான் வழங்கப்பட்டு வந்தது.

இப்போதுதான் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்தவிதமான நிபந்தனைகளும் கிடையாது. ஏற்கெனவே விசாரணை நீதிமன்ற உத்தரவு நடைமுறைகளின்படி, ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதத்திற்கு ஒருமுறை, பேரறிவாளன் கையெழுத்திட வேண்டும். இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்து வழக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே நீதிமன்றத்தின் விருப்பமாக இருந்தது. ஆளுநர் தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தக் கூடாது என்பதுதான் நீதிமன்றத்தின் கருத்தாக இருந்தது.

இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் அனைத்து வகையிலும் முயற்சி செய்கிறது. எங்களது தரப்பிலும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. மத்திய அரசுக்கு இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு கொண்டுவந்து முடிக்கும் எண்ணம் இல்லை என்பது நீதிமன்றத்துக்கு தெரியவந்தது. எனவே, அதனால் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதால், நளினி, முருகன் உள்ளிட்ட மற்ற அனைவருக்குமே ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதி அனுரவின் இந்திய பயண விபரம்!

Pagetamil

48 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி

Pagetamil

உலக செஸ் சாம்பியன் ஆனார் குகேஷ்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுன் கைது: பெண் ரசிகை உயிரிழந்த சம்பவத்தில் நடவடிக்கை

Pagetamil

சூப்பர் ஸ்டாருக்கு 300 கிலோ எடையில் மூன்றரை அடி உயர கருங்கல் சிலை

east pagetamil

Leave a Comment