“இவ்வளவு பெண்கள் இருக்கும் போது, உனக்கு பழகுவதற்கு விஜயலட்சுமிதான கிடைத்தாளா.. து” என என் மனைவி திட்டினார். அந்த ஒருமுறைதான் எங்கள் குடும்பத்தில் இந்த விடயத்தை பேசினோம். மற்றும்படி இதை பேசியதேயில்லை. இந்த பெண்களால் 13 வருடங்களாக வன்கொடுமைக்குள்ளாகி வருகிறேன். பெண் வன்கொடுமை பற்றி பேசும்போது, ஆண் வன்கொடுமை பற்றியும் பேச வேண்டுமல்லவா“ என்று நடிகை விஜயலட்சுமி புகாரின் பேரில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான சீமான் கூறியுள்ளார்.
திரைப்பட நடிகை விஜயலட்சுமி கடந்த ஓகஸ்ட் 28ஆம் திகதி காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் என்னைத் திருமணம் செய்துகொண்டார். நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். நான் 7 முறை கர்ப்பமானேன். ஆனால்,என்னுடைய அனுமதியின்றி, மாத்திரை மூலம் கருச்சிதைவு செய்தார். தற்போது சீமான் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் என்னை மிரட்டுகிறார். எனவே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தார்.மேலும், திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமியின் வாக்குமூலம் அளித்தார்.தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.
இதையடுத்து, நேரில் ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், கடந்த 12ஆம் திகதி சீமான் ஆஜராகாமல், அவரது வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சீமானுக்கு 2 வது முறையாக போலீஸார் சம்மன் வழங்கினர்.இந்நிலையில், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொடுத்த புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் வாங்கினார். எழுத்துபூர்வமாக புகார் மனு அளித்திருந்த நிலையில் அதனை வாபஸ் வாங்கியுள்ளார்.
'இவ்வளவு பெண்கள் இருக்கும் இடத்தில் பழகுவதற்கு வேறு யாரும் கிடைக்கவில்லையா? என்று மட்டுமே என் மனைவி என் மீது கோபப்பட்டார்'
செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் தகவல்#Seeman #NaamTamilarKatchi pic.twitter.com/w4pKROZYsS
— Spark Media (@SparkMedia_TN) September 18, 2023
மேலும், “வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. என்னால் தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை” என்றும் நடிகை விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.
காவல்துறையினர் அனுப்பிய இரண்டாவது சம்மன் தொடர்பாக, சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அவரது மனைவி கயல்விழியுடன் திங்கள்கிழமை நேரில் ஆஜரானார். அவரிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது: “நடிகை விஜயலட்சுமி ஏற்கெனவே கடந்த 2012ம் ஆண்டு ஒருமுறை வழக்கைத் திரும்ப பெற்றிருந்தார். மீண்டும் தற்போது வழக்கைத் திரும்ப பெற்றுள்ளார்.
காவல்துறை கடந்த 9ஆம் திகதி ஆஜராக அழைப்பாணை அனுப்பியிருந்தனர். அன்று என்னால் வரமுடியவில்லை. மறுபடியும் இரண்டாவது முறை அழைப்பாணை அனுப்பினர். நான் 18ஆம் திகதி ஆஜராவதாக கூறிவிட்டேன். நாளை விசாரணைக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு வரக்கூடாது அல்லவா. நானாகத்தான் வந்தேன், விஜயலட்சுமி கொடுத்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துவிட்டு செல்கிறேன்.
2011இல் இந்த வழக்கு கொடுக்கப்படுகிறது. திமுக காங்கிரஸ் தூண்டுதலின் பேரில்தான் இந்த வழக்கு கொடுக்கப்படுகிறது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, இந்த வழக்கின் உண்மைத் தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். அவர் இதேபோல் வழக்கமாக குற்றம்சாட்டி வருவதாக கூறப்படுகிறது. இதில் உண்மைத் தன்மை இல்லை என்றவுடன் தூக்கி எறிந்துவிட்டார். அதன்பின் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்திலும் விஜயலட்சுமி நிறைய புகார் கொடுத்தார். ஆனால், அதை எடுக்கவில்லை.
என் மீது 128 வழக்குகள் உள்ளன. மக்களுக்கான போராட்டங்களால் என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள். அவற்றை இவர்களால் எடுக்க முடியவில்லை. இந்த வழக்கை எடுத்து, பெண்களிடத்தில் என்னை அசிங்கப்படுத்திவிடலாம், மக்களிடமிருந்து அந்நியப்படுத்திவிடலாம், இதன்மூலம் எனது மதிப்பை சிதை்துவிடலாம் என்ற நோக்கத்தில் செய்யப்பட்டதுதான். ஒரு போராட்டக்காரனை அவதூறுகளைக் கொண்டு மூடிவிடலாம் என்றால் அதை எப்படி சகித்துக் கொள்வது. இந்த விசாரணையில், விஜயலட்சுமி ரூ.60 லட்சம் பணம் கொடுத்தாரா? ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகள் கொடுத்தாரா? என்று கேட்டனர். அதெல்லாம் ஒன்றும் கொடுக்கவில்லை என்று பதிலளித்தேன்.
இந்த பெண்களால் 13 ஆண்டுகள் நான் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறேன். பெண் வன்கொடுமை பேசும்போது, ஆண் வன்கொடுமை குறித்தும் பேச வேண்டும் அல்லவா? நான், எனது குடும்பம், என்னைச் சார்ந்தவர்கள், என்னை சார்ந்திருக்கிற லட்சக்கணக்கான சொந்தங்கள், உள்ளிட்டோர் பட்ட வன்கொடுமைகளுக்கு என்ன தீர்வு? குற்றச்சாட்டு கொடுத்தபோதே விசாரித்திருக்க வேண்டும் இல்லையா?
திரும்பப்பெற்ற வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்து அதற்கு உயிர்கொடுத்து மறுபடியும் விசாரித்துள்ளனர். காவல்துறை விசாரிக்கிறது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துகின்றனர். இந்த பில்டப் எல்லாம் ரொம்ப ஓவராக இருக்கிறது. பாட்ஷா படம் பில்ட்ப்பைவிட ஓவராக இருக்கிறது.
இரண்டு பெண்கள் சேர்ந்துகொண்டு ஒருவனை இவ்வளவு தூரம் வன்கொடுமை செய்வதைவிட வன்கொடுமை இருக்கிறதா சமூகத்தில்? இந்த சமூகத்தின் முன்பு அவமானப்படுவதை, ரசிக்கின்றனர். இது வன்கொடுமை இல்லையா? நான் நீதிமன்றம் செல்வேன். விஜயலட்சும் கூறிய குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் வந்து சொல்ல வேண்டும். எட்டு முறை கருக்கலைப்பு செய்ததாக கூறுவதெல்லாம் என்ன நகைச்சுவை?” என்று அவர் கூறினார்.
காவல்நிலையம் முன்பு குவிந்த நாம் தமிழர் கட்சியினர்: முன்னதாக விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக சீமான் வருவதையொட்டி, அந்தப் பகுதியில் காலையில் இருந்தே ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் குவிந்தனர். அசாம்பவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில், கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், பேரிகாட் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். சீமான் காவல் நிலையத்துக்குள் செல்லும்போது, அவருடன் நாம் தமிழர் கட்சியினரும் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சியினர் போலீஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது கட்சியினரிடம் பேசிய சீமான், பொறுமையாக காத்திருங்கள். எந்த பிரச்சினையானலும் நான் எதிர்கொள்வேன், என்று மைக்கில் பேசி தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.