26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

காணாமல் போன 15 பேரை கண்டுபிடித்தோம்: ஓ.எம்.பி தலைவர்

காணாமல்போனோர் பற்றிய முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை அடுத்து, அவர்களில் 15 பேருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை கண்டறியப்பட்டிருப்பதாகத் தெரிவித்த காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி) தவிசாளர் மகேஷ் கட்டுலந்த, அதுகுறித்த விபரங்களை சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று (30) வெளியிட்டார்.

வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ‘அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்’ என்ற தொனிப்பொருளில் இன்று புதன்கிழமை அனுட்டிக்கப்படும் சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திலும் யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, கிளிநொச்சி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகங்களிலும் நினைவுகூரல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கொழும்பிலுள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமான நினைவுகூரல் நிகழ்வில் அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், நீதியமைச்சின் செயலாளர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரதிநிதிகள் என்போர் கலந்துகொண்டிருந்ததுடன் காணாமல்போனவர்களை நினைத்து விளக்கேற்றி, அவர்கள் எங்கிருந்தாலும் நலமுடன் இருக்கவேண்டும் எனப் பிரார்த்தித்தனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு கருத்து வெளியிட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த, இதுவரையில் பூர்வாங்க விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்டுள்ள 3900 முறைப்பாடுகள் தொடர்பில் நீதியை வழங்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் 6 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு அறிவிக்கத் திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி 2000 – 2021ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் 15 பேருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை கண்டறியப்பட்டிருப்பதாகவும் மகேஷ் கட்டுலந்த இதன்போது அறிவித்தார்.

அதன்படி மேற்குறிப்பிட்ட 15 பேரில் ஒருவர் காணாமல்போகவில்லை என்றும், மாறாக அவர் உயிரிழந்துள்ளார் (எவ்வாறு என்ற விபரம் கூறப்படவில்லை) என்ற உண்மை கண்டறியப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர், எஞ்சிய 14 பேரில் மூவர் புலம்பெயர் நாடுகளில் வசித்துவருவது கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் எஞ்சிய 11 பேரும் வயோதிபம் மற்றும் பல்வேறு நோய்நிலைமைகளின் விளைவாக உள்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் வசித்துவந்ததாகவும், சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியதாகவும் குறிப்பிட்ட மகேஷ் கட்டுலந்த, அவர்கள் தற்போது அவர்களின் குடும்பத்தாருடன் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். இருப்பினும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கருத்திற்கொண்டு அவர்களது பெயர், விபரங்களை வெளியிடுவதை தவிர்ப்பதாகவும் தெளிவுபடுத்தினார்.

அதேவேளை இதன் மூலம் ஏனைய காணாமல்போனோரின் குடும்பத்தினருக்கு உயர்ந்தபட்ச எதிர்பார்ப்பை வழங்கக்கூடாது என்பதிலும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதிக கரிசனை கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, கிளிநொச்சி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகங்களிலும் இதனையொத்த நினைவுகூரல் நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

பெண்களுக்கு அரச அச்சுறுத்தல் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

east tamil

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

east tamil

தொடரும் சுற்றிவளைப்பு – வீழ்ச்சியடைந்த அரிசி விலை!

Pagetamil

Leave a Comment