வரி அல்லது தீர்வை செலுத்தப்படாத மதுபானங்களின் பாவனையை தடுப்பதையும் மற்றும் போலி பொருட்களை தடுக்கும் அதேவேளை தீர்வை வருமானத்தின் பாதுகாப்பை முன்னேற்றுவதையும் இலக்காக கொண்டு, நம்பகரமான ஸ்ரிக்கர் முறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், ஸ்ரிக்கர் முறையில் எவ்வாறு ஊழல் மோசடி நடைபெறகிறது என்ற அதிர்ச்சி தகவலை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இன்று நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
இந்த மோசடிகளில், மதுவரி திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தொடர்புபட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தினார்.
இன்று நாாளுமன்றத்தில் வாய்மூல கேள்வி நேரத்தில் இந்த தகவல் வெளிப்பட்டது.
கம்பஹாவிலுள்ள வீடொன்றின் முகவரியை சபையில் வாசித்து காட்டிய சுஜீவ சேனசிங்க, அங்கிருந்து ஒரு தொகை ஸ்ரிக்கர்கள் மதுபான நிறுவனமொன்றிற்கு வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
அந்த முகவரியுள்ள வீடு, மதுவரி திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்கவுக்கு சொந்தமானது என்றார்.
அத்துடன், பாசிக்குடாவில் மதுவரி திணைக்கள உத்தியோகத்தரான சுமித் திசாநாயக்க என்பவர் சோதனைக்கு சென்றபோது, மதுவரி திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சோதனையை நிறுத்தி விட்டு திரும்புமாறு உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், மதுபான நிறுவனங்கள் விற்பனை நிலைய அனுமதிப்பத்திரம் பெற முடியாதென்ற விதியுள்ள போது, போலி நிறுவனங்கள் மூலம் எவ்வாறு உரிமங்களை பெறுகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய, இந்த விவகாரம் பற்றி விசாரிப்பதாகவும், சுஜீவ சேனசிங்க வெளிப்படுத்திய தகவல்களை விசாரணைக்குழுவிடம் கையளிப்பதாகவும் தெரிவித்தார்.