Site icon Pagetamil

தமிழக மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம்: ‘கிங்டம்’ படக்குழு

தமிழக மக்களின் உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால், அதற்கு மிகவும் வருந்துகிறோம் என்று ‘கிங்டம்’ படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ’கிங்டம்’ திரைப்படத்தில், தமிழீழ மக்களை இழிவுபடுத்தும் வகையில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் அவருடைய கட்சியினர் ‘கிங்டம்’ பேனர்களை கிழிக்கத் தொடங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து படத்தினை தயாரித்துள்ள சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்ற எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘கிங்டம்’. இப்படத்தின் சில காட்சி அமைப்புகள் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக கேள்விப்பட்டோம். தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்.

இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது என படத்தின் மறுப்புப் பகுதியில் (Disclaimer Portion) குறிப்பிட்டுள்ளோம் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம். இதையும் மீறி மக்களின் உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால், அதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். ’கிங்டம்’ திரைப்படத்திற்கு ஆதரவு அளிக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்கள்.

Exit mobile version