விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டி வட்டம் பூரிகுடிசை அருகே அமைந்துள்ளது நரசிங்கனூர் கிராமம். இப்பகுதியில் உள்ள பனையேறிகள் வெகு நாட்களாக கள்தடை நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி போராடி வருகின்றனர். இந்நிலையில் மே 24ம் தேதியில் தமிழ்நாடு பனையேரிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பனை கனவுத் திருவிழா 2025 நடைபெற்றது.
வெகு விமரிசையாக நடைபெற்ற திருவிழாவில் கருத்தரங்கம், நடனம், கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன. பல ஆயிரம் மக்கள் கலந்துகொண்ட விழாவின் ஒரு பகுதியாக விழா மேடையில் உரையாற்றினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
“தமிழரின் தேசிய மரமே பனைமரம் தான். ஆனால் இதுவே இங்கு அற்பப் பொருளாக பார்க்கப்படுகிறது.
பனைமரம் மூலமாக 840 வகையான பயன்கள் கிடைக்கின்றன. மைதாவிற்கு பதிலாக பனை மாவினைப் பயன்படுத்தலாம். பனை ஏறுவது ஒரு தொழில் அல்ல அது ஒரு வாழ்வியல்.
ஒரு நாட்டின் வேளாண் குடிமகன் வாழ்கிறான் என்றால் அந்த நாடு வளர்கிறது என்று பொருள். ஒரு குடிமகன் வாழ முடியாமல் சாகிறான் என்றால் அந்த நாடு நாடல்ல சுடுகாடு என்று பொருள். இன்று வேளாண் குடிமகன் சாவது என்பது செய்தி ஆனால் அவை பிற்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படப் போகிறது என்பதற்கான முன்னறிவிப்பு.
கள் உணவில் ஒரு பகுதி இதனைக் குடித்து இறந்தவன் ஒருவர் கூட கிடையாது. பத்து நாட்கள் தொடர்ந்து கள் அருந்தினால் தோல் மினுமினுப்பாக மாறிவிடும். இது ஒரு திருவிழா மட்டுமல்ல உரிமை கோரும் விழா.
இது பனையேறிகளுக்கான பிரச்னை மட்டுமல்ல நம் பரம்பரைக்கான பிரச்னை. விரைவில் இதே இடத்தில் பனை சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்கப்படும் இங்கு அரசு பணி கொடுக்கப்படும். ரேஷன் கடையில் வெள்ளை சர்க்கரைக்குத் தடை விதிக்கப்படும், அதற்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை வழங்கப்படும். குறிஞ்சி மருதம் நெய்தல் அங்கன்வாடிகளை அரசே நிறுவும்”. எனப் பேசினார்.

