உள்ளூராட்சிசபைகளில் இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தீர்மானம்!

Date:

உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் இணைந்து அதிகாரங்களை கைப்பற்றுவதென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கொள்கையளவில் தீர்மானித்துள்ளது.

எனினும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனான நேரடி கலந்துரையாடல்களின் பின்னர் இறுதி தீர்மானத்தை எடுப்பதென்றும் தீர்மானித்துள்ளது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வடக்கு கிழக்கு தழுவியரீதியில் இலங்கை தமிழ் அரசு கட்சி அதிக ஆசனங்களை கைப்பற்றியிருந்தது. இதற்கு அடுத்ததாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அதிக ஆசனங்களை கைப்பற்றியிருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதற்கடுத்த நிலையில் உள்ளது.

எனினும், யாழ்ப்பாணத்தின் சில உள்ளூராட்சி மன்றங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கணிசமான ஆசனங்களை கைப்பற்றி, பிறிதொரு தரப்பின் ஆதரவுடன் ஆட்சியமைக்கலாமென்ற நிலையில் உள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சி அதிக உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகித்தாலும், அதற்கும் ஆட்சியமைக்க பிறிதொரு தரப்பின் ஆதரவு தேவை.

அனேக சபைகளில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்திருந்தது.

இந்த பின்னணியில், நேற்று முன்தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களாக த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரியிருந்தார்.

முன்னதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழு கூடி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுடன் பேச்சு நடத்த தீர்மானித்தது. பின்னர், தமிழ் தேசிய பேரவையென்ற அந்த தரப்பின் கூட்டணியிலுள்ள கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்திய பின்னர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பேச்சு நடத்தினார்.

இதேநாளில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும், த.சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார்.

இந்த சூழலில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கட்சிகள் நேற்று இணையவழியில் கலந்துரையாடல் நடத்தினார்கள். இதில், இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க பெரும்பாலானவர்கள் விரும்பினார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் சில சபைகளில் ஆதிக்கம் செலுத்தினாலும், யாழ்ப்பாணத்துக்கு வெளியில் உள்ள சபைகளில் அவர்கள் குறிப்பிடத்தக்க ஆசனங்களை பெறவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டு வைத்தால் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் என்ன செய்வதென்ற யதார்த்தத்தின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தனர்.

எனினும், நாளை அல்லது நாளை மறுநாள் எம்.ஏ.சுமந்திரனும், கஜேந்திரகுமாரும் யாழ்ப்பாணம் வந்து, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருடன் நேரடி பேச்சு நடத்தவுள்ளனர். இதன் பின்னர் இறுதி தீர்மானத்தை பகிரங்கப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி இலங்கை தமிழ் அரசு கட்சி பெரும்பான்மை பெற்ற சபைகளில், இலங்கை தமிழ் அரசு கட்சி தவிசாளர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உப தவிசாளர்களை பெறுவதென்றும், வவுனியா மாநகரசபை உள்ளிட்ட சில சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முதல்வர் பதவியை பெறுவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த இணக்கம் ஏற்படுத்தப்பட்டால், யாழ் மாநகரசபையில் இலங்கை தமிழ் அரசு கட்சி முதல்வரை நியமிக்கும். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பிரதி முதல்வரை நியமிக்கும். தற்போதைய நிலையில், மாநகரசபையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஒரேயொரு வேட்பாளரே வட்டார ரீதியில் வெற்றிபெற்றார். அது தர்சானந்த். அவர் பிரதி முதல்வராக வாய்ப்புக்கள் உள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 17 வயதானவர் போதைப்பொருள் பாவித்திருந்தார்!

வேலணை - அல்லைபிட்டிப் பகுதியில் வீதிக்காவல் கடடையிலிருந்த பொலிசாரின் உத்தரவை மீறி...

சிம் அட்டை மீள் பதிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர்...

யாழில் துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவர் கைது!

யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் பச்சை மிளகாய் வாங்க வந்தவர் கொண்டு வந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்