முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 8 ஆம் தpfதி மட்டக்களப்பில் அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் துறை தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றது.
2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பயணித்த நிலையில், அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார்.
தமிழ் மக்களிடையே பிளவை ஏற்படுத்த அரச பின்னணியில் கிழக்கு பிரதேசவாதத்தை தூண்ட, அப்போது துணைப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு பல மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் ஒரு அங்கமாக, யாழ்ப்பாணத்தவர்களை மட்டக்களப்பை விட்டு விரட்ட பல கொலைகள் அரங்கேறின. இந்த பின்னணியிலேயே கிழக்கு உபவேந்தரும் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் பிள்ளையான் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிகளின் கீழ் இந்த சம்பவம் குறித்து CID தனது விசாரணையைத் தொடர்கிறது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலிலும் பிள்ளையானின் பங்கு குறித்த விசாரணைகள் நடக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.