30.9 C
Jaffna
April 29, 2025
Pagetamil
இலங்கை

பெட்டிசன் அனுப்பியவருக்கு நேர்ந்த கதி: வடக்கு விவசாய திணைக்கள சிக்கலில் மற்றொரு சுவாரஸ்ய சம்பவம்!

மன்னார் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் சகிலா பானுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் விதமாக முறைப்பாட்டு கடிதங்கள் அனுப்பிய நபர் ஒருவர், தான் செய்தது தவறென வவுனியா நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு, தவறுக்கு மன்னிப்பு கோரி பத்திரிகை விளம்பரம் செய்வதாக ஏற்றுக்கொண்டார்.

தனக்கு எதிராக அவதூறு பரப்பியதாக குறிப்பிட்டு சகிலா பானு தொடர்ந்த மேலும் இரண்டு மானநஸ்ட வழக்குகளும், இதே நீதிமன்றத்தில் விசாரணைகள் நடந்து வருகிறது.

பண்ணை உத்தியோகத்தரான மருதை என்பவருக்கு எதிரான வழக்கும், முன்னாள் வடமாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் சிவகுமாருக்கு எதிரான வழக்கும் விசாரணை நடந்து வருகிறது.

வடமாகாண விவசாய திணைக்களத்தின் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பில் கடந்த பல வருடங்களாக தமிழ்பக்கம் சுட்டிக்காட்டியிருந்தது. அரசியல் செல்வாக்கு காரணமாக அதிகாரத்துக்கு வருவதும், பதவியில் ஒட்டியிருப்பதும் விவசாய திணைக்களத்தின் சாபமாக கடந்த காலத்தில் இருந்தது. இதனால் திறமையான பல அதிகாரிகள் வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேறி, வடக்கு விவசாய திணைக்களம் மோசமாக வீழ்ச்சியடைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு விவசாய திணைக்களத்தில் கடமையிலிருந்த திறமையான உத்தியோகத்தர்கள் எவ்வாறு வெளியேறினார்கள்- வெளியேற்றப்பட்டார்கள் என்பதற்கு- தற்போதைய மன்னார் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் சகிலா பானு விவகாரமும் ஒரு உதாரணம்.

அப்போதைய விவசாய பணிப்பாளர் சிவகுமார், சகிலா பானுவுக்கு எதிராக தீவிரமாக செயற்பட்டதாக குற்றச்சாட்டு இருந்தது.

முறைப்பாடுகள், மொட்டைக்கடிதங்கள், நிர்வாக அழுதங்களால் அவர் மாகாண நிர்வாகத்தை விட்டு வெளியேறி, மத்திய விவசாய அமைச்சின் கீழ் பணியாற்றி வருகிறார்.

அவர் மாகாண நிர்வாகத்தில் கடமையாற்றிய போது, வவுனியா பண்ணையை இலாபம் தரும் நிறுவனமாக மாற்றியிருந்தார். அவர் அதை பொறுப்பேற்றதற்கு முன்னர் அது நட்டத்தில் இயங்குவதாக கணக்கு காண்பிக்கப்பட்டு வந்தது. அவர் வெளியேறிய பின்னரும் நட்டத்தில் இயங்கியதாக காண்பிக்கப்பட்டது.

சகிலா பானு வடமாகாண விவசாய திணைக்களத்தில் பணியாற்றிய போது, உயரதிகாரிகளினால் பழிவாங்கப்பட்டதாகவும், அவர் மாகாண சேவையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அப்போது குற்றச்சாட்டு இருந்தது.

வடமாகாண ஆளுனராக இருந்த பி.எஸ்.எம்.சாள்ஸூம் பக்கச்சார்பாக நடந்து, அவரை வெளியேற்ற உதவியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

சகில பானுவை மாகாண நிர்வாகத்திலிருந்து வெளியேற்ற அழுத்தம் கொடுக்கப்பட்ட காலப்பகுதியில் அவர் தொடர்பில் திணைக்களத்துக்கு சிலர் பெயர் குறிப்பிட்டும், பெயர் குறிப்பிடாமலும் முறைப்பாட்டு கடிதம் அனுப்பியிருந்தனர். விவசாய அமைப்பின் பெயரில் முறைப்பாட்டு கடிதம் அனுப்பிய ஒருவர் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். அவருக்கு எதிராக சகிலா பானு வவுனியா நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சகிலா பானு மீது ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு சுமத்தியது கண்டறிப்பட்டதையடுத்து, குற்றச்சாட்டு சுமத்தியவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டது.

தன்னிடம் இழப்பீடு வழங்க பணமில்லையென அவர் குறிப்பிட்டதையடுத்து, மும்மொழி பத்திரிகைகளிலும் மன்னிப்பு கோரும் அறிவித்தல் பிரசுரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை,ஏனைய இரண்டு வழக்குகளும் விசாரணைக்கு வந்து, பிரதிவாதிகளுக்கு பதிலளிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் விவசாய பணிப்பாளர் சிவகுமார், சகிலா பானு தொடர்பில் குற்றம்சுமத்தி அலுவலக ரீதியான கடிதங்களை மேலதிகாரிகளுக்கு பிரதியிட்டு, சகிலா பானுவுக்கு அனுப்பியிருந்தார்.

தன் மீதான மோசமான பிம்பத்தை உருவாக்கவும், பதவி உயர்வுகளை தடுக்கவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அவதூறுகள் இந்த கடிதங்கள் என சகிலா பானு குற்றம்சாட்டியிருந்தார்.

சிவகுமார் சார்பில் சட்டத்தரணி கு.குருபரனின் நெறிப்படுத்தலில் சட்டத்தரணிகள் முன்னிலையாகி- 2020 இல் நடந்த சம்பவங்களுக்கு தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது, அந்த குற்றச்சாட்டுக்கள் அலுவலக ரீதியான கடிதங்களாகவே அனுப்பப்பட்டன, பொதுவெளியில் வெளியாகி மானம் போகவில்லையென்ற சாரப்பட அவரது சட்டத்தரணிகள் சமர்ப்பணங்களை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வழக்கு மே 6ஆம் திகதி மீளவும் விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படியுங்கள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு!

Pagetamil

கனடா பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழர்கள்

Pagetamil

பல் வைத்தியரின் வாயில் வெடித்த சீனப்பட்டாசு!

Pagetamil

மஹிந்த பாணியிலேயே அனுர அரசும்!

Pagetamil

கடந்த அரசுகளுக்கும் ஜேவிபிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை: ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது!

Pagetamil

Leave a Comment