எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் துவிச்சக்கர வண்டி சின்னத்தில் போட்டியிட சில சிறிய குழுக்கள் பேச்சு நடத்தி வருகின்றன.
பொ.ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ் தேசிய பசுமை இயக்கம், சாவகச்சேரியில் க.அருந்தவபாலன் தலைமையிலான குழு, சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி என்ற குழு, இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து பிரிந்து ஜனநாயக தமிழ் அரசு கூட்டணியென்ற பெயரில் செயற்படும் சட்டத்தரணி கே.வி.தவராசா குழு ஆகியன பேச்சில் ஈடுபட்டுள்ளன.
இந்த பேச்சுக்களை தொடர்ந்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியாக- அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும், சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி, அந்த கூட்டணியிலிருந்து விலகி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளது.
அண்மையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் இணைவதாக அறிவித்த கே.வி.தவராசா தலைமையிலான குழு, தற்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைய தீர்மானித்துள்ளது.
பொ.ஐங்கரநேசன் குழுவும், முன்னதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் இணைய தீர்மானித்திருந்தது. எனினும், வெளிநாட்டு நிதி அன்பளிப்பாளர்களின் கட்டுப்பாட்டினால் முடிவை மாற்றியது.
பொ.ஐங்கரநேசன் குழுவினர் நல்லூர் பிரதேசசபையில் மட்டும் ஓரளவு வாக்கை பெறக்கூடும். தவராசா அணி தீவக பகுதிகளில் மிகச்சிறியளவு வாக்கை பெறக்கூடும். எனினும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனான கூட்டணி பேச்சின் போது, நல்லூர் பிரதேசசபை தவிசாளர் பதவியை பொ.ஐங்கரநேசன் தரப்பும், யாழ் மாநகரசபை முதல்வர் பதவியை யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் இளம்பிறையனுக்கு வழங்க வேண்டுமென தவராசா அணியும் நிபந்தனை விதிக்க முயன்றுள்ளனர்.
எனினும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த நிபந்தனைகளை ஆரம்பத்திலேயே நிராகரித்து விட்டது.
ஆசன பங்கீட்டின் அடிப்படையில் கூட்டணி வைக்க முடியாது, கொள்கையின் அடிப்படையில் கூட்டணி வைக்கலாமென முன்னணி கறாராக தெரிவித்ததையடுத்து, இந்த இரண்டு தரப்பும் நிபந்தனைகளை கைவிட்டுள்ளன.
எனினும், இந்த தரப்புக்களுடன் ஆசனப்பங்கீட்டு பேச்சுக்கள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆசனப்பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்ட பின்னரே கூட்டணி பற்றிய அறிவித்தல் பகிரங்கமாகும் என தெரிய வருகிறது.
இதேவேளை, இதுவரையான தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி- தற்போது புதிய கூட்டணிப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது. இது, முன்னணியின் பெரியளவிலான கொள்கை மாற்றமாக கருதப்படுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர், பாராளுமன்றத்துக்குள் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து செயற்படுவjற்கான முயற்சிகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.