பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் அதன் நம்பகத்தன்மை குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த பாராளுமன்றத்திலும் இதே விவாதத்தில் பங்கேற்றபோது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளை தான் எழுப்பியிருந்ததாகவும், ஆணைக்குழுவின் தலைவர் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களை சந்தித்த பின்னர், உண்மைக்கு முரணான அறிக்கையை வெளியிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டதாக கூறிய அந்த அறிக்கை உண்மைக்கு புறம்பானது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் தமிழ் மொழி பேச மறுப்பதால், அப்பகுதி மக்களுக்கு பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படுவதில்லை என்றும், ஆணைக்குழு தலையீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அத்துடன், கடந்த அரசாங்கத்தின் போது பலாலியில் நடைபெற்ற போராட்டத்தில், நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்தபோதும், பலாலி பொலிஸாரால் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் கைதுசெய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டும், இன்று வரை எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
முயற்சிகள் செய்யப்படுகின்றன என சொல்லப்பட்டாலும், உண்மையில் பொறுப்புக்கூறல் இல்லாமல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெளிவிவகார அமைச்சரால் ஜெனிவாவில் நிலைமாறுகால நீதி குறித்து பேசியபோதும், குற்றவியல் நீதியை உறுதிப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், முந்தைய அரசாங்கங்களின் செயல்பாடுகளைப் போலவே தற்போதைய அரசாங்கமும் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தந்து கருத்தை முன்வைத்திருந்தார்.
இந்த நிலைமையில் மனித உரிமைகள் ஆணைக்குழு முழுமையாக சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும், வடக்கு, கிழக்கில் இடம்பெறும் அடக்குமுறைகளுக்கு நேர்மையான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், அரசாங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.