எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் சங்கு சின்னத்தில்- 9 தமிழ் கட்சிகள் இணைந்து போட்டியிடவுள்ளதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது 7 கட்சியாக குறைந்துள்ளது.
இந்த கூட்டணிக்கு உடன்பட்ட போதும், பின்னர் கட்சிக்கு பணம் வழங்குபவர்கள் விரும்பாததால் வி.மணிமண்ணன், பொ.ஐங்கரநேசன் ஆகியோர் இந்த கூட்டணியில் இணையாமல் இருக்க முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களின் மூலம் அறிய முடிகிறது.
உள்ளூராட்சி தேர்தலில் கூட்டாக போட்டியிடுவது குறித்து கடந்த பல மாதங்களாகவே இந்த தரப்புக்களுக்குள் உள்ளக கலந்துரையாடல் நடந்து வந்தது. மிக குறிப்பாக சொன்னால்- வி.மணிவண்ணன் தானே தொலைபேசியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில பிரமுகர்களை தொடர்பு கொண்டு, கூட்டணியாக செயற்படுவது பற்றி தொடர்ந்து பேசி வந்தார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் மு.சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக்கட்சியையும் இணைத்து போட்டியிட, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முயற்சித்த போதும், அது வெற்றிபெறவில்லை. அந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, மு.சந்திரகுமாரையும் இணைக்க வேண்டியதன் அவசியத்தை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரும், அதன் ஆதரவாளர்களும் உணர்ந்து கொண்டனர். அப்பொழுதிலிருந்து, மு.சந்திரகுமாரை இணைப்பதென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்குள் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் முடிவும் செய்யப்பட்டிருந்தது.
வி.மணிவண்ணன் தொடர்ந்து கூட்டணி நச்சரிப்பை செய்து வந்த சமயத்தில், மு.சந்திரகுமாரும் இந்த கூட்டணியில் இருப்பார் என்ற தகவல் அவருக்கு சொல்லப்பட்டிருந்தது என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்திருந்தது. அதில் மணிவண்ணனுக்கும் ஆட்சேபணை இருக்கவில்லை.
இன்னொரு வகையில் சொல்வதென்றால்- இந்த கூட்டணி பேச்சை விரைவுபடுத்தி முடிக்குமாறு மணிவண்ணன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை தொடர்ந்து நச்சரித்தும் வந்தார்.
இந்த சமயத்தில்தான், தன்னை கூட்டணியின் செயலாளராக நியமிக்க முடியுமா என்ற கோரிக்கையையும் வைத்தார். அது நிராகரிக்கப்பட்டதும், இளைய தலைமுறையிடம் கூட்டணியை ஒப்படைத்தால் போதுமானது என்று கூறினார். அதுவும் நடக்காத போதிலும், கூட்டணி அமைந்து விட வேண்டுமென வலியுறுத்தி, தமிழ் மக்கள் கூட்டணி- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தரப்புக்குமிடையில் சந்திப்பு கூட நடந்தது.
அந்த கூட்டங்களில் மணிவண்ணனை கூட்டணிக்குள் இணைக்க வேண்டாமென ரெலோ தரப்பின்- முன்னாள் யாழ் பிரதி மேயர் ஈசன் போன்றவர்கள் எதிர்த்தனர். அவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தனர். ஈசன் தரப்பின் எதிர்ப்பு- மணிவண்ணன் கூட்டணிக்குள் வந்தால், தன்னால் முதல்வர் ஆக முடியாது என்ற பின்னணியில் உருவானதாக கருதப்பட்டது வேறு கதை.
பொ.ஐங்கரநேசன் விவகாரத்திலும் இதுதான் நடந்தது. அவருடனும் கூட்டணி குறித்து பல சுற்று உள்ளக கலந்துரையாடல் நடந்தது. அப்போது, மு.சந்திரகுமாரும் கூட்டணியில் இணைவார் என ஐங்கரநேசனுக்கு சொல்லப்பட்டு, அவரும் சம்மதித்திருந்தார்.
புதிய கூட்டணி தொடர்பில் கடந்த 23ஆம் திகதி யாழ்.இணுவிலில் நடந்த கூட்டத்துக்கு ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி, சமத்துவக்கட்சி, ஜனநாயக போராளிகள், தமிழ் தேசிய கட்சி, தமிழ் தேசிய பசுமை இயக்கம், ஜனநாயக தமிழரசு கூட்டணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
இதற்குள் இன்னொரு உபரி தகவலையும் சொல்ல வேண்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலின் முன்னர்- வி.மணிவண்ணன் தரப்பினரை, க.வி.விக்னேஸ்வரன் மிகவும் நம்பினார். கூட்டணி முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தையும் வழங்கியிருந்தார். என்றாலும், தேர்தலின் பின்னர் விக்னேஸ்வரனின் அபிப்பிராயம் தலைகீழாக மாறியிருந்தது. மணி தரப்பினர் கட்சியை கைப்பற்றும் நோக்கத்தில், தங்குமிடமாக தம்மை பயன்படுத்துகிறார்கள் என்பதை உணர்ந்து, மணியை கட்சிக்குள் தனித்து தீர்மானம் எடுப்பவர் என்ற நிலைமையிலிருந்து மாற்றினார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுன் மணிவண்ணன் தனிப்பட்ட ரீதியில் பேசிக் கொண்டிருந்த போது, இந்த விடயத்தை அறிந்த விக்னேஸ்வரன்- தமிழ் மக்கள் கூட்டணியுடன் கூட்டு பற்றிய பேச்சு நடத்த வேண்டுமெனில் தன்னால் அங்கீகரிக்கப்பட்டவர்களுடன்தான் பேச வேண்டுமென கூறிவிட்டார். இதன்பின்னரே- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்கும்- தமிழ் மக்கள் கூட்டணிக்குமிடையில் நேரடி கலந்துரையாடல் நடந்தது. இதில் விக்னேஸ்வரனின் பிரதிநிதிகளாக பேராசிரியர் சிவநாதனும், இராசதுரையும் கலந்து கொண்டிருந்தனர்.
இணுவில் கூட்டத்தில், மு.சந்திரகுமார் கலந்துகொண்டது விக்கியின் பிரதிநிதிகளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அறிவிக்கப்படாதவர்களும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர், சிலரது கூட்டணி பங்கேற்பு தமக்கு சிக்கலாக உள்ளதாக விக்கியின் பிரதிநிதிகள் கூறினர்.
என்ன சிக்கல் என கேட்டபோது- சந்திரகுமார் அண்மைக்காலம் வரை ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டு வைத்திருந்தார் என வெடிகுண்டை தூக்கிப் போட்டிருந்தனர்.
இதுபற்றி செயலாளர் விக்கியுடன் பேசியே முடிவெடுக்கலாம் என அவர்கள் குறிப்பிட்டதையடுத்து, பேசிவிட்டு வாருங்கள் என அனுப்பி வைத்தனர். கூட்ட மண்டபத்துக்கு வெளியில் வந்த மூவரும், விக்கியுடன் தொலைபேசியில் கலந்துரையாடி விட்டு, மீண்டும் கூட்டத்துக்கு வந்து- தற்போதைய அரசியல் சூழல் கருதி இந்த கூட்டணியில் இணைய சம்மதிக்கிறோம் என குறிப்பிட்டனர். பேராசிரியர் சிவநாதன், இராசதுரை, வி.மணிவண்ணன் ஆகியோர் இதனை தெரிவித்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
எனினும், நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் வி.மணிவண்ணன் முற்றிலும் திரித்து, “நாங்கள் கலந்துரையாடி விட்டுத்தானே முடிவை அறிவிப்பதென கடந்த கூட்டத்தில் சொன்னோம். நாளை (இன்று) கட்சியின் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கிறோம்“ என சிரிக்காமல்- சங்கடம் இல்லாமல் கதையை திரித்து கூறினார்.
தமிழ் தேசிய கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி சிறிகாந்தா கடுப்பாகி விட்டார். “மணிவண்ணன் நீங்கள் ஒரு சட்டத்தரணி. சிறுபிள்ளை இல்லை. நானும் ஒரு சட்டத்தரணி. சிறுபிள்ளைகள் போல நடந்து கொள்ளக்கூடாது. இணுவில் கூட்டத்தில் கூட்டணியில் கலந்து கொள்கிறோம் என்கிறீர்கள். இன்று வந்து, இன்னும் முடிவில்லையென மாற்றி மாற்றி கதைக்கிறீர்கள். அரசியலில் இப்படி செயற்பட முடியாது. கூட்டணியில் இணைய முடிவு செய்யவில்லையென்றுவிட்டு, இங்கு வந்து எங்களின் முகங்களை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். முதலில் சென்று, ஏதாவதொரு முடிவெடுத்து விட்டு வாருங்கள்“ என காட்டமாக கூறிய பின்னரே, வி.மணிவண்ணன் கூட்டத்திலிருந்து வெளியில் வந்தார்.
ஆனால், அவருடன் கூட்டத்துக்கு வந்த இராசதுரை கடைசி வரை கூட்டத்தில் இருந்து, பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டிருந்தார்.
கூட்டத்தின் பின்னர், நேற்றிரவு அளவில்- வி.மணிவண்ணன் தரப்பினர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை தொடர்பு கொண்டு, இந்த கூட்டணியில் இணைய முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கான காரணத்தையும் தனிப்பட்ட ரீதியில் குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது, தமது கட்சிக்கு நிதி வழங்கும் வெளிநாட்டிலுள்ள பலர், இந்த கூட்டணியில் இணைய விரும்பவில்லை, அவர்களை மீறி தமது கட்சியால் செயற்பட முடியாது என குறிப்பிட்டுள்ளனர். வெளிநாட்டிலுள்ள நிதி வழங்குனர்களை “ஸ்பொன்சர்கள்“ என அவர்கள் நாகரிகமாக குறிப்பிட்டுள்ளனர். (கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் இதுதான் நடந்தது. சங்கு சின்னத்தில் இணைய தமிழ் மக்கள் கூட்டணி விரும்பி பேச்சை நடத்தியபோதும், கடைசி கட்ட பேச்சில் வெளிநாட்டிலுள்ள நிதி வழங்குனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, விக்கி அணி தனித்து போட்டியிட்டது)
தமிழ் மக்கள் கூட்டணிக்காகவும், வி.மணிவண்ணனுக்காகவும் நிதி வழங்கும் பல வெளிநாட்டு பண முதலைகள்- சங்கு சின்னத்தில் தமிழ் மக்கள் கூட்டணி போட்டியிட விரும்பவில்லை. அதற்கான முதலாவது காரணம்- தொடர்ந்து தனித்து போட்டியிட்டாலே பின்னர் தனித்தரப்பாக உருவாகலாம் என்கிறார்கள்.
வி.மணிவண்ணன் தரப்பினருக்கு பணம் வழங்கும் வெளிநாட்டு அனுசரணையாளர் ஒருவர் சில வாரங்களின் முன்னர் தமிழ்பக்கத்துடன் பேசும் போது- மணிவண்ணனை வைத்து 20 வருட எதிர்கால திட்டம் தம்மிடம் உள்ளதென பீற்றிக்கொண்டிருந்தார். மணிக்கு தேவையான பணத்தை வழங்கி கட்டளையிட, அவர் அதை செயற்படுத்திக் கொண்டிருந்தால் சரியென்றார்.
உள்ளூராட்சி தேர்தல் கூட்டு பேச்சு ஆரம்பித்த பின்னர், தமிழ் மக்கள் கூட்டணியின் நிதி அனுசரணையாளர்களில் ஒருவரான பிரித்தானியாவிலுள்ள மங்களேஸ்வரன் என்பவர், கூட்டிலுள்ள மற்றொரு கட்சி பிரமுகருடன் தொடர்பு கொண்டு, இந்த கூட்டில் தமிழ் மக்கள் கூட்டணி இணையாது, வீணாண முயற்சிகளை எடுக்காதீர்கள் என குறிப்பிட்டிருந்தார்.
தாயகத்திலுள்ள க.வி.விக்னேஸ்வரனோ, வி.மணிவண்ணனே தலைகீழாக நடந்து என்ன முயற்சியெடுத்தாலும், இறுதி கட்டளை- முடிவு- எங்கு, எப்படி எடுக்கப்படுகிறது என்பதற்கு இதுவொரு உதாரணம் என்றார் அந்த கட்சி பிரமுகர்.
பணத்துடன் வந்தவர்களின் கதை கேட்கும் ஐங்கரநேசன்
யாழ்ப்பாணம்- இணுவிலில் நடந்த முதலாவது கூட்டணி பேச்சில் பொ.ஐங்கரநேசனின் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் ஒருவர் கூட்டத்துக்கு வந்திருந்தார். அந்த கூட்டத்தின் பின்னர்- தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் முக்கிய பிரமுகர் ஒருவர்- பொ.ஐங்கரநேசனுக்கும் மிக வேண்டப்பட்டவர்- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவருடன் தொலைபேசியில் பேசிய போது, “ஐங்கரநேசன் இந்த கூட்டுக்குள் வரார். அவர் என்ன செய்கிறார் என்பதே நமக்கு புரியவில்லை. அவர் அரசியல் செய்யவில்லை. அவருக்காக நீங்கள் மினைக்கெடாமல் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுங்கள்“ என்றார்.
இதன்பின்னரே, புதிய கூட்டில் அங்கம் வகிக்கவில்லையென்ற ஐங்கரநேசனின் அறிக்கையே வெளியானது.
அந்த பிரமுகர் அதற்கு சொன்ன காரணம்- “வெளிநாட்டில் இருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டிருந்த சிலர் தற்போது பெருந்தொகை பணத்துடன் உள்ளூராட்சி தேர்தலுக்காக வந்துள்ளனர். அந்த லைனுக்குள் ஐங்கரநேசன் சிக்கிவிட்டார். ஐங்கரநேசனை சுயேச்சையாக போட்டியிட வைப்பதென்பதே அவர்களின் திட்டம். அவர்கள் பணத்தை தண்ணீராக இறைக்க தயாராக இருக்கிறார்கள். ஐங்கரநேசன் அதில் மயங்கிவிட்டார்“ என்றார்.
நேற்று (26) யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டணி பற்றிய கூட்டத்தில்- ஜனநாயக தமிழரசு கூட்டணி சார்பில் பங்கேற்ற க.நாவலன் பேசும்போது- “இந்த கூட்டத்துக்கு மு.சந்திரகுமார் வந்துள்ளார். அவர் வந்ததால்தான், ஐங்கரநேசன் வரவில்லை“ என்றார்.
அப்போது இடைமறித்த பா.கஜதீபன்- “இந்த கதையை யார் உங்களுக்கு சொன்னது“ என்றார்.
“ஐங்கரநேசன்தான் சொன்னார்“ என்றார் நாவலன்.
“அவர் பொய் சொல்கிறார். இந்த கூட்டில் சந்திரகுமார் இருப்பார் என்பது தெரிந்து, அவர் இணைய சம்மதம் தெரிவித்து, முதல் கூட்டத்தில் பிரதிநிதியை அனுப்பினார்“ என்பதை தெளிவுபடுத்தினார் பா.கஜதீபன்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் இணையாமல் இருப்பதற்கு தமிழ் மக்கள் கூட்டணியும், தமிழ் தேசிய பசுமை இயக்கமும் உத்தியோகபூர்வமாகவோ அல்லது உத்தியோகபூர்வமல்லாமல் தனது ஆதரவாளர்கள் மூலமோ- சந்திரகுமாரின் பிரசன்னத்தையே பிரசாரம் செய்து வருகிறார்கள். செய்யப் போகிறார்கள். ஆனால், உண்மையாக காரணம் அதுவல்ல- பணமூட்டைதான் விவகாரம் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில் உள்ளவர்கள்.
ஆனால், இனி கூட்டங்களில் பேசும் போது- நாக்கு கூசாமல்- ஒட்டுக்குழுக்களுடன் இணையமாட்டோம், தமிழ் தேசியம், தேசியத்தலைவர் என பேசுவார்கள். அதை கேட்கவும், நம்பவும் சிலர் இருப்பார்கள்.
இப்படியானவர்கள் இருக்கும் வரை தமிழ தேசிய அரசியல் இப்படித்தான் இருக்கும்.