2025ம் ஆண்டுக்கான யூனானி மருத்துவ தினம் “Natural Healing and Sustainable Health through Unani” (இயற்கை சிகிச்சை முறைகளின் மூலம் நீடித்த ஆரோக்கியம்) என்ற கருப்பொருளின் கீழ், நாளை (26) காலை 9.00 மணிக்கு திருகோணமலை யக்கப் பீச் ரிசோட்டில் நடைபெறவுள்ளது.
யூனானி மருத்துவத்தின் பாரம்பரியச் சிறப்பையும், அதன் அறிவியல் அடிப்படையிலான பயன்பாடுகளையும் முன்னிறுத்தும் வகையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது. இயற்கை மருத்துவ முறைகள், அவற்றின் மருத்துவ பலன்கள் மற்றும் மக்களுக்கான விழிப்புணர்வு உள்ளிட்ட அம்சங்கள் இதில் முக்கியமாக பேசப்படும்.
இந்த நிகழ்வில் யூனானி மருத்துவத்தின் முன்னேற்றம், சமூகப் பயன்கள் மற்றும் மருத்துவத் துறையில் அதன் தாக்கம் குறித்து முக்கிய உரைகள் இடம்பெறவுள்ளன. மேலும், யூனானி மருத்துவர்கள், வைத்திய கலாநிதிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சமீபத்திய ஆராய்ச்சி கட்டுரைகளை பகிர்ந்து கொள்வதுடன், யூனானி மருத்துவத்தின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மருத்துவ அறிவியல் அடிப்படைகள் குறித்த விவாதங்களும் நடத்தப்படவுள்ளன.
இத்துடன், யூனானி மருத்துவத் துறையில் சிறப்பாக பணி புரியும் மருத்துவர்களுக்கு கெளரவிப்பும், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு மற்றும் சிறப்பு விருதுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின் மூலம் யூனானி மருத்துவம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் அதிகரிக்கும் நோக்கில், இது மிகுந்த உற்சாகத்துடன் முன்னெடுக்கப்பட இருக்கிறது.