மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கிய அரிய ஆழ்கடல் உயிரினமான துடுப்பு மீன்கள், அப்பகுதி மக்களிடையே பேரழிவுக்கான அறிகுறி என அச்சத்தை உருவாக்கியுள்ளது.
“டூம்ஸ்டே மீன்” என அறியப்படும் இந்த மீன்கள் பொதுவாக 60 முதல் 3,200 அடி ஆழத்தில் வாழும் தன்மை கொண்டவை. அவை ஆழ்கடலில் மட்டுமே காணப்படுகின்றன, ஆனால் சமீபத்தில் மெக்சிகோவில் கரையோதுங்கி வருவதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மெக்சிகோவில் உள்ள பஜா கலிபோர்னியா சுர் என்ற பகுதியில் உள்ள கடற்கரையில், இந்த துடுப்பு மீன் தென்பட்டதையடுத்து, மீண்டும் அவற்றை கடலுக்குள் விட்டுள்ளனர். ஆனால் அந்த மீன் மீண்டும் மீண்டும் கரைக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆழ்கடல் உயிரினம், இயற்கை பேரழிவுகளுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. பலர், இந்த மீன்கள் கடலின் ஆழத்திலிருந்து மேற்பரப்புக்கு வரும் முன், பேரழிவு ஒன்று ஏற்படுவதாக நம்புகின்றனர்.
இதனை முன்னிட்டு, ஜப்பானிய நாட்டுப் புறக் கதைகளில், துடுப்பு மீன்களின் தோற்றம் பூகம்பங்கள் போன்ற பேரழிவுகளுக்கு முன்னோடியாகக் கருதப்படுகிறது. 2011ம் ஆண்டில் ஜப்பானில் நிலநடுக்கத்திற்கு முன்னர் பல துடுப்பு மீன்கள் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் இந்த நம்பிக்கை பரவலாக பிரபலமானது. மேலும், 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் கலிபோர்னியாவில் துடுப்பு மீன்கள் கரைக்கு வந்ததும், அதன்பின் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இப்போது, மெக்சிகோவில் அப்படி ஏதாவது நடைபெறக்கூடும் என்ற அச்சத்துடன் அப்பகுதி மக்கள் கவலைப்பட்டுள்ளனர்.