உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ள கட்டுப்பணத்தை வேட்பாளர்களுக்கும் கட்சிகளுக்கும் வழங்கும் நடவடிக்கை இவ்வாரம் ஆரம்பிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் இன்று (19) ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, கட்டுப்பணத்தை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதுடன், இது மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 80,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.
ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வைப்புத்தொகையை செலுத்திய வேட்பாளர்கள், பெப்ரவரி 28, 2025 க்கு முன்னர் தங்கள் நிதியை திருப்பிச் செலுத்த விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
வேட்பாளர்கள் நிதியை வைப்பு செய்த பின்னர் பெற்ற அசல் ரசீதை எழுத்துப்பூர்வ கோரிக்கையுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார்.
இதேவேளை, 2024ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பிற்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், 2023ம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அச்சிடப்பட்ட வாக்காளர் அட்டைகளை அழிப்பதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.