குருநாகல் மாவட்டத்தின் தோரயாயா பகுதியில் இன்று காலை விபத்து ஒன்று நேர்ந்துள்ளது. இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருபது பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட தகவலின்படி, கதிருவலவிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று தோரயாயா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில் மாதுருஓயாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து குறித்த பேருந்தில் மோதியதாலே விபத்து ஏற்பட்டுள்ளது
பேருந்து அதி வேகமாக இயக்கப்பட்டதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடக பேச்சாளர் மற்றும் மூத்த காவல்துறை அத்தியாட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
மோதி வியத்துக்குள்ளான பேருந்துகளிலிருந்து பயணிகளை மீட்க மீட்புக்குழுக்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவம் குறித்து காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.