நாட்டை டிஜிட்டல் சமூகத்துக்குத் திருப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) அனுர குமார திசாநாயக்க தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதற்கமைந்து, GovPay எனும் அரச கொடுப்பனவு தளத்தை உருவாக்குதல், ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு கொண்டுச்செல்லல், தூதரகங்களின் ஊடாக பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (eBMD) சான்றிதழ்களை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் முறைமை செயல்படுத்தப்படவுள்ளன.
இந்த திட்டம் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, ICTA நிறுவனம் மற்றும் Lanka Pay ஆகியவற்றின் ஒத்துழைப்பில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், மத்திய வங்கி இந்த கொடுப்பனவு முறையின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தற்போது GovPay தளத்தின் மூலம் 16 அரச நிறுவனங்களின் கொடுப்பனவுகளைச் செய்யலாம். எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 30 புதிய அரச நிறுவனங்களும் இதில் இணைக்கப்படவுள்ளன. நீண்ட கால திட்டமாக அனைத்து அரச நிறுவனங்களையும் இதில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, “தொழிநுட்பம் மக்களின் வாழ்வை எளிதாக்குவதோடு, தாராளமான, தரமான, விரயம் குறைந்த சேவைகளை வழங்க உதவுகிறது. இதன் மூலம் கிராமப்புறங்களிலும் நகரப்புறங்களிலும் உள்ள இடைவெளி குறைக்கப்படும்,” எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக, ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் கொழும்பிலேயே நிலைபெற்றிருந்ததால், பல தூரப் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு இப்போது பிரதேச செயலகங்களிலேயே சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் ஒரே வழி டிஜிட்டல் மயமாக்கல் எனவும், இது நாடு முழுவதும் வேகமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.


இந்த நிகழ்வில் பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபயரத்ன, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, உள்ளிட்ட அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.