வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வட்டுக்கோட்டை பகுதியில் பதிவாகியுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் தனியாக வசித்து வரும் வயோதிபப் பெண்ணொருவரிடமிருந்தே குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வயோதிப பெண்ணிடம் 50 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவ தினத்தன்று மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று, தான் கமநலசேவை திணைக்களத்தில் இருந்து வருவதாகவும், விவசாய அழிவுக்கு நட்ட ஈடாக குறித்த பெண்ணுக்கு 2 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பணத்தை பெறுவதற்கு 50 ஆயிரம் ரூபாவை செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளதாக குறித்த பெண்ணால் பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உண்மையறியாத அந்த வயோதிபப் பெண் நம்பிக்கையுடன் 50 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார். பின்னர், தான் ஏமாற்றப்பட்ட விடயம் பின்னர் தெரியவந்த நிலையில் இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த சந்தேகநபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த சந்தேக நபரை விரைவில் கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.