இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசாவின் இறுதிச்சடங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய பதாகை குறித்து காங்கேசன்துறை பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முறைப்பாட்டை மேற்கொண்ட பிரமுகரை தமிழ் பக்கம் தொடர்பு கொண்ட போது, முறைப்பாடு செய்ததை ஏற்றுக்கொண்டார்.
“மாவையின் இறுதிக்கிரியையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் குறிப்பிட்ட உறுப்பினர்கள் சிலரை துரோகிகளாக சித்தரித்து பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இது இறுதிக்கிரியையில் பங்கேற்கும் அந்த உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருந்தது. துரோகிகளாக சித்தரித்ததன் மூலம் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது எமக்கு பாதுகாப்பு பிரச்சினையை உருவாக்கியுள்ளது“ என்ற அடிப்படையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் காங்கேசன்துறை பொலிசார், மாவை சேனாதிராசாவின் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பதாகைகள் குறித்து தமக்கு தெரியாது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.