கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் ஏற்பாட்டில், பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை வழங்கும் நிலையங்களுக்கான கள விஜயம் இன்று (07) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் இன்று (07) காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றதுடன், அதனைத் தொடர்ந்து சமூக மட்ட பெண் தலைமைத்துவ தலைவர்கள் 30 பேரை கொண்ட குழுவால் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளீதரன் இந்த கள விஜயத்தை கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலிருந்து ஆரம்பித்து வைத்தார். இதன்போது, கிளிநொச்சி பொலிஸ் நிலைய சிறுவர் பிரிவு, நீதிமன்ற வளாகம், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நட்பு நிலையம், பிராந்திய மதுபான புனர்வாழ்வு நிலையம் ஆகிய சேவை வழங்கும் இடங்களுக்கு குறித்த குழு விஜயம் மேற்கொண்டது.
இந்த சேவை நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக சமூக மட்ட தலைவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன், பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கக்கூடிய உதவிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.