நிராகரிக்கப்படும் வாக்கு எண்ணிக்கை குறைப்பதற்கு வாக்குச்சீட்டின் மாதிரியை மாற்றுக் கோரி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய தேர்தல்கள் ஆணை குழு தலைவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளது
வாக்குச் சீட்டின் மாதிரியில் மாற்றத்தை ஏற்படுத்தி நிராகரிக்கப்படுகின்ற வாக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்துள்ள ஆலோசனையை கரிசனையோடு கவனத்தில் கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணை குழு தலைவர் ஆர் . எம். ஏ. எல் . ரத்நாயக்க தெரிவித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தலில் நிராகரிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு சிபாரிசுகளை முன் வைத்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் தேசிய தேர்தல் ஆணைக்குழு தலைவருக்கும் இடையில் நேற்று ராஜகிரியில் உள்ள தேர்தல்கள் ஆணை குழு தலைமை அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது மலையக மாவட்டங்களில் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தலின் போது நிராகரிக்கப்படுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக காணப்படுகிறது.
வாக்காளர்கள் தமது எண்ணங்களை சரியாக வெளிப்படுத்த முடியாததற்கு, வாக்குச்சீட்டின் வடிவமைப்பே முக்கிய காரணமாக இருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசினர் தெரிவிக்கின்றனர். நிராகரிக்கப்படும் வாக்குகளின் காரணமாக, தாம் விரும்பும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய முடியாத நிலைக்கு வாக்காளர்கள் தள்ளப்படுவதாக அவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்களில், சுயேட்சைக் குழுக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இலக்கங்கள் வழங்கப்படுகின்றன. ஒரே மாதிரியான இலக்கங்கள் இரண்டு இடங்களில் இடம்பெறுவதால், வாக்காளர்கள் குழப்பமடையும் நிலை உருவாகிறது. இதன் காரணமாக, அவர்கள் விருப்ப வாக்கு இலக்கங்களுக்கு பதிலாக, சுயேட்சைக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட இலக்கத்தின் மேல் புல்லடி இடுகின்றனர். இதனால், குறிப்பிட்ட வாக்குகள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்படுகின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கான தீர்வாக, வாக்குச்சீட்டின் வடிவமைப்பில் மாற்றம் செய்து, வாக்காளர்களுக்குப் புரிந்துகொள்ள எளிதாக மாற்ற வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, சுயேட்சைக் குழுக்களுக்கு வழங்கும் இலக்கத்தை எழுத்து வடிவிலும், வேட்பாளர்களுக்கு வழங்கும் இலக்கத்தை எண் வடிவிலும் மாற்றியமைக்குமாறு அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், இந்த விடயம் குறித்து தேர்தல் ஆணைக்குழு கலந்துரையாடி இருப்பதாகவும், ஏற்கனவே தேர்தல் தொடர்பாக பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ளும்படி அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். அதனுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆலோசனைகளும் இணைக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
எனினும், இது அரசியல் யாப்புடன் தொடர்புடைய விடயமாக இருப்பதால், இதற்கான திருத்தங்கள் பாராளுமன்றத்தின் ஊடாகவே மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, பொறுப்பான அமைச்சருக்கு அறிவித்து, அதன்படி தீர்வு பெற்றுக்கொடுக்க ஆணைக்குழுவின் தரப்பு சிபாரிசுகளை முன்வைக்கும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சார்பில் அதன் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் மற்றும் உப தலைவர் எஸ். ராஜமணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.