வடமாகாணத்தை தவிர்ந்த வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் வன்னி ஆசிரியர்களை, வன்னியிலேயே சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பரிந்துரை செய்துள்ளார்.
முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக அரச அதிகாரிகளும் பொது அமைப்புகளும் சுட்டிக்காட்டிய நிலையில், அவர் இதனை தெரிவித்தார்.
வன்னிப் பகுதிகளில், குறிப்பாக முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில், விஞ்ஞான பாட ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக உள்ளதாக அவர் கவலை தெரிவித்தார். முல்லைத்தீவில் 25, மன்னாரில் 25, வவுனியாவில் 40 என்ற எண்ணிக்கையில் விஞ்ஞான ஆசிரியர்கள் தேவையாக இருப்பதாகவும், அதேவேளை, யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
வன்னிப் பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் புத்தளம், குருநாகல், கண்டி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் பணியாற்றும் நிலை காணப்படுவதாகவும், அவர்களை மீண்டும் வன்னியில் சேவையில் ஈடுபடுத்தினால், வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் வன்னி ஆசிரியர்களின் சிக்கல்கள் தீர்க்கப்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், வெளிமாவட்டங்களில் பணியாற்றும் வன்னி ஆசிரியர்களின் நிலைமைகள், அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்களை சிந்திக்க வேண்டியது அவசியமாகும். அதேபோல், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து வன்னியில் சேவையாற்றும் ஆசிரியர்களின் சிக்கல்களையும் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இவ்வாறு ஒழுங்குகளை மேற்கொள்வதன் மூலம், வன்னிப் பகுதிகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை குறையக்கூடியதுடன், வெளிமாவட்டங்களில் பணியாற்றும் வன்னி ஆசிரியர்களின் சிக்கல்கள் மற்றும் அவர்களால் வன்னிக்கு செல்லும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.