நாட்டில் முதல் முறையாக குரங்குகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கணக்கெடுப்பு மாவட்ட மட்டத்தில் எதிர்வரும் 15 அல்லது 22ம் திகதிகளில் நடத்தப்படும் என தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு குரங்குகளினால் இலட்சக்கணக்கான தேங்காய்கள் அழிக்கபட்டதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குரங்குகளின் எண்ணிக்கையை சரியான முறையில் கணக்கெடுத்து அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை அவசியமாகியுள்ளது.
இந்த கணக்கெடுப்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்கள் இணைந்து பணியாற்றவுள்ளன.
துல்லியமான தரவுகளை சேகரிப்பதன் மூலம் குரங்குகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும், தென்னைப் பயிர்ச்செய்கைக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கும் இது உதவியாக இருக்கும் என சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.