நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவில் இன்று (04) அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய விதமாக கணவன் தனது மனைவியை கூறான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நாவலப்பிட்டி செம்ரோக் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய கயானி தில்ருக்ஷி குமாரி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கணவன்-மனைவி இடையிலான தொடர்ந்தும் ஏற்பட்ட வந்த முரண்பாடுகளின் காரணமாக, குறித்த பெண் கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், கொழும்பிலுள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் அவர் வேலை செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (நேற்று 03) மாலை, நிகழ்வொன்றில் கலந்து கொள்ளும் நோக்கில் நாவலப்பிட்டிக்கு வந்த அவர், தனது மகளின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை 04.02.2025) அதிகாலை 1.30 மணியளவில், அவரது கணவன் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் இரகசியமாக நுழைந்து, தூங்கிக்கொண்டிருந்த மனைவியை கத்தியால் தாக்கியுள்ளார்.
உயிர் தப்ப வீட்டை விட்டு ஓடிய அவரை, கணவன் பின் தொடர்ந்து சென்று மீண்டும் கத்தியால் குத்தியும், தலையில் கல்லால் அடித்தும் கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனது தாயைக் காப்பாற்ற முற்பட்ட மகளும் இதில் காயமடைந்துள்ள நிலையில், குடும்பத் தகராறின் விளைவாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.