“இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைக்கப்படுவது முக்கியமானதாகும். இதன் மூலம் இலங்கை பல நன்மைகளைப் பெறும்,” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் கூறினார்.
இதன்போது, மேலும் தெரிவித்த இவர், பாரதியார் தான் தனது பாடல்களில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைக்கப்படுவது தொடர்பில் வலியுறுத்தியிருந்தார். இதுவே எமது நிலைப்பாடாகும். இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான தொலைவு வெறும் 18 கிலோமீட்டர் மட்டுமே. இந்த பாலம் அமைக்கப்பட்டால், நாம் காரில் சென்று இந்தியாவை எளிதில் அடையலாம். அதேபோன்று, இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் எளிதில் இலங்கைக்கு வர முடியும். தற்போது இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகிறார்கள். பாலம் அமைத்தால் அவர்களின் வருகை மேலும் அதிகரிக்கும். எனவே, இலங்கை மற்றும் இந்தியா இடையே பாலம் அமைப்பது குறித்து அரசு முன்முயற்சி எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில், கிளங்கன் வைத்தியசாலையை அரசு அவசரமாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என இராதாகிருஷ்ணன் எம்.பி வலியுறுத்தினார். இந்தியா ஏற்கனவே இந்த வைத்தியசாலைக்கு உதவியுள்ளதுடன், மீண்டும் உதவி கேட்டு வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அத்துடன், “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டத்தின் காரணமாக நடைபாதை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான நடவடிக்கைகளை அரசு மீளப் பரிசீலிக்க வேண்டும்” என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.