உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 14-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ். இதன்மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் உள்ள ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் கடந்த நவம்பர் 25-ம் தேதி தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ் மோதினார். 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். 2-வது சுற்று டிராவில் முடிந்த நிலையில் 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பிறகு நடைபெற்ற அடுத்த 7 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன.
இதையடுத்து நடைபெற்ற 11-வது சுற்றில் குகேஷ் வெற்றிபெற்று தொடர்ச்சியான டிராக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். ஆனால் அடுத்த சுற்றில் டிங் லிரென் வெற்று பெற்று குகேஷுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 13-வது சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதனால் இருவரும் தலா 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று இறுதிச் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில், குகேஷ் கருப்பு காய்களுடனும், டிங் லிரென் வெள்ளை காய்களுடனும் விளையாடினர். இந்த சுற்று பெரும்பாலும் டிராவை நோக்கி செல்வது போன்றே தெரிந்தது. ஆனால் 58-வது நகர்த்தலின் போது குகேஷ், டிங் லிரெனை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.
55-வது நகர்த்தலின்போது டிங் லிரென், ரூக்கை (யானை) எஃப் 2-க்கு நகர்த்தி பெரிய தவறை மேற்கொண்டார். இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட குகேஷ் அடுத்தடுத்த நகர்வுகளை அற்புதமாக மேற்கொண்டு டிங் லிரெனை ராஜா மற்றும் சிப்பாய் உடன் மட்டும் விளையாடும் நிலைக்கு கொண்டு வந்தார். அந்த சூழலில் டிங் லிரென் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதன்மூலம் 7.5 – 6.5 என்ற புள்ளிகள் கணக்கில் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். உலக சாம்பியன் பட்டம் வென்ற 18-வது வீரர் குகேஷ்.
தமிழக வீரர் சாதனை: சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், இளம் உலக செஸ் சாம்பியன் ஆன முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார் சென்னையை சேர்ந்த குகேஷ். இதற்கு முன்பு ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் 22 வயதில் பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது. உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார். இதற்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தார்.
சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு ரூ.11 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த டிங் லிரென் ரூ.10.13 கோடியை பெற்றார். குகேஷுக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.