யாழ்ப்பாணத்தில் அண்மையில் நிகழும் தொடர் மரணங்களுக்கு எலிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாமென பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (11) உயிரிழந்தவரின் மாதிரிகள் கொழும்பு, கண்டியில் பரிசோதிக்கப்பட்டதில், அவர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.
அந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதும், அவரது மாதிரிகள் பெறப்பட்டு, கொழும்பு, கண்டி வைத்தியசாலைகளுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மாதிரிகள் மீதான பரிசோதனை முடிவுகள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில், அவர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.
அண்மைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலினால் அடுத்தடுத்து உயிரிழப்புக்கள் நிகழ்ந்து வருகிறது. இன்று 7வது நபர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலும் 3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுதவிர, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சுமார் 25 பேர் வரையில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.