போதைப் பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
போதைப் பொருள் ஒழிப்பில் சென்னை போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவல்படி, மண்ணடியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைதாகினர்.
இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கிவந்து, காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. கஞ்சா மட்டுமின்றி அதிக விலை கொண்ட மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருட்களும் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதை போலீஸார் கண்டறிந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவான எண்களைக் கொண்டு, யாரையெல்லாம் தொடர்புகொண்டு கஞ்சா பொட்டலங்கள், மெத்தம்பெட்டமைன்கள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் சப்ளை செய்தார்கள் என தனிப்படை போலீஸார் விசாரணை செய்தனர்.
இதற்கிடையே, காட்டாங்கொளத்தூர் பகுதியில் தங்கியுள்ள கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா ஆயில் டப்பாக்கள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை தனிப்படை போலீஸார், காட்டாங்கொளத்தூர் சென்று அறையில் பதுங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் 2 பேரைக் கைது செய்து விசாரித்தனர். கேரளாவைச் சேர்ந்த அவர்களது அறையில் கஞ்சா ஆயில் உட்பட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் உள்ள எண்களைக் கொண்டு தனிப்படை போலீஸார் தொடர்ந்து துப்பு துலக்கினர். இதில் பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துலக் (26) எண்ணும் இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த அலிகான் துலக்கை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். அவருடன் மேலும் 3 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபலமான கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பு படித்த அலிகான் துலக், தற்போது சினிமா உதவி இயக்குநராகப் பணி செய்து வருகிறார். அவர் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருட்களை பயன்படுத்தியதோடு, சினிமா துறையினர், கல்லூரி மாணவர்கள், ஐ.டி ஊழியர்கள், இளைஞர்கள் உட்பட பலருக்கும் அதை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.