26.2 C
Jaffna
December 14, 2024
Pagetamil
உலகம்

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்: பின்னணியும் தாக்கமும் என்ன?

இஸ்ரேல் – லெபனான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததுள்ளது. இதன் பின்னணி, தாக்கம் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த ஆண்டு ஒக்டோபரில் போர் ஏற்பட்டது. இந்தப் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா போராளி அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் இதுவரை சுமார் 3,750 பேர் உயிரிழந்துள்ளனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும், இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் மத்தியஸ்த முயற்சியால் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே இரண்டு மாத போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்படி தெற்கு லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா தனது போராளிகளை விலக்கிக் கொள்ளும். இதுபோல் இஸ்ரேலும் அங்கிருந்து தனது படைகளை திரும்பப் பெறும். தெற்கு லெபனானில் அந்நாட்டு இராணுவ வீரர்களும் ஐ.நா. அமைதிப் படையினரும் நிறுத்தப்படுவார்கள். அமெரிக்கா தலைமையிலான சர்வதேச குழு போர் நிறுத்த நடைமுறைகளை கண்காணிக்கும். ஒப்பந்த நிபந்தனைகளை ஹிஸ்புல்லா மீறினால் தாக்குதல் நடத்தும் உரிமை தங்களுக்கு உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இந்த போர் நிறுத்த உடன்பாட்டை வரவேற்றுள்ள இந்தியா, “இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதை வரவேற்கிறோம். பதற்றத்தை தணிக்கவும், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளவும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர பாதைக்கு திரும்பவும் நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தோம். இந்த முன்னேற்றம், இந்தப் பரந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளது.

பலமுனை அழுத்தமும் போர் நிறுத்தமும்: கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்தியதன் பின்னணியில் லெபனானில் போர் நிறுத்தத்துக்கு ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தயாராக இருந்தனர். ஹிஸ்புல்லா இயக்கத்தின் பின்னணியிலிருந்த ஈரானும் போர் அழுத்தத்தை விலக்கிக்கொள்ளவே விரும்பியது. இதனைச் செய்வதற்கு இஸ்ரேலுக்கு அமெரிக்காவில் இருந்தும் சில அழுத்தங்கள் இருந்தன.

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர் லெபனான் நாட்டில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் நஜிப் மிகாடி, “நாங்கள் தெற்கு லெபனானில் எங்களின் படைகளின் வலிமையை அதிகரிக்க தீர்மானித்துள்ளோம். இந்தப் போர் நிறுத்தம் லெபனானில் புதிய பக்கங்களைத் திறக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 2006 தீர்மானம் 1701-ன் படி, லெபனானின் இஸ்ரேலிய பகுதிகளில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் விலகிச் செல்லவேண்டும் என்பதை மதிக்க வேண்டும் என்பதே போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சமாகும். இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா படைகள் இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற பகுதியான ப்ளூ லைன் மற்றும லிடானி ஆறு பகுதியில் இருந்து தங்களின் துருப்புகளை 60 நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோனும் அறிவித்த போர் நிறுத்தம் புதன்கிழமை அமலுக்கு வந்ததும் இடம்பெயர்ந்த லெபனான் மக்கள் தெற்கு நோக்கி நகரத் தொடங்கினர். பலர் தங்களின் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கி இருப்பதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது. வழக்கமாக 20 நிமிடங்களில் கொஞ்சம் பிஸியாக இருக்கும்போது அரை மணிநேரம் பயணம் செய்யக்கூடிய சாலைகளில் தற்போது குறிப்பிட்ட இடத்துக்குச் செல்வதற்கு நான்கு மணிநேரங்கள் ஆகிறது.

தங்களின் வீடுகளுக்கு திரும்புபவர்கள் வெற்றியின் குறியீடுகளைக் காட்டுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் வீடு திரும்புதல் என்பதே பெரிய வெற்றிதான் என்கிறார் களத்தில் இருக்கும் சர்வதேச ஊடக நிருபர் ஒருவர். மேலும் அவர் கூறுகையில், “லெபனான் முழுவதும் ஒருவகையான நிம்மதி நிலவுகிறது என்றாலும், இந்தப் போர் நிறுத்தம் பலவீனமான ஒன்றுதான் என்றும் மக்கள் நம்புகின்றனர்” என்றார்.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியின் மையப்பகுதியில் இடிபாடுகள் நிறைந்த தனது வீட்டினை கனத்த இதயத்துடன் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறார் 25 வயதான ரயானே சல்மான். ‘இந்த வீட்டினைக் கட்ட எங்களது குடும்பம் அதன் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தது. நாங்கள் 25 ஆண்டுகள் இங்கு வாழ்ந்தோம். இப்போது எதுவுமே இல்லை’ என்கிறார்.

இவரைப் போலவே, லெபனான் முழுவதும் ஆயிரக்கணக்காண குடும்பங்கள் தங்களின் வீடுகளை இழந்துள்ளன. பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் அழிவின் பாதிப்புகள் அதிகம். இந்த கிராமங்கள் நகரங்களைக் கட்டியெழுப்ப சர்வதேச பணம் தேவைப்படும்.

இஸ்ரேலிய படைகள் முழுமையாக திருப்பெறும் வரையில், போர்முனையின் முன்னணி கிராமங்களுக்கு மக்கள் திரும்ப வேண்டாம் என்று லெபனான் ராணுவம் அறிவித்துள்ளது. என்றாலும், புலம்பெயர்ந்த மக்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று லெபனானின் நாடாளுமன்ற சபாநாயகர் நபிஹ் பெர்ரி அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறுகையில், “இஸ்ரேல் மற்றும் லெபனான் ராணுவத்தினரின் எச்சரிக்கைகள் இருந்த போதிலும் மக்கள் தங்களின் வீடுகளுக்கு, தங்களின் நிலங்களுக்கு திரும்ப வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

போரின்போது வீசப்பட்ட வெடிக்காத குண்டுகளை தொடவேண்டாம் என்ற துண்டு பிரசுரங்களை லெபனான் ராணுவத்தினர் விநியோகித்தனர். அதில், “வெடிக்காத பொருள்களுக்கு அருகில் செல்ல வேண்டாம். அதனைத் தொட வேண்டாம். அதுபற்றி உடனடியாக இராணுவத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வெடிக்காத குண்டுகள் இடிபாடுகளுக்குள் இருப்பது மிகவும் ஆபத்தானது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தற்போது ஏற்பட்ட நிலை இல்லை, நீண்ட காலமாக இங்கே இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என்று இராணுவத்தினர் தெரிவித்தனர்.

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கவனம் தற்போது காசா மீது திரும்பியுள்ளது. இஸ்ரேல் மீது காசாவிலுள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அது தொடர்ந்து வருகிறது. இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து காசாவில் போர் நிறுத்ததுக்கு மேலும் ஓர் அழுத்தத்துக்கு தயாராகி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார்.

என்றாலும், இந்தப் போர் நிறுத்தம் காசா போர் நிறுத்தத்துக்கான முன்னோடி என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அங்கு கள நிலவரம் மிகவும் சிக்கலானது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இராணுவச் சட்டம் அமல் எதிரொலி: தென்கொரிய ஜனாதிபதி பதவி நீக்கத்துக்கு ஆதரவாக எம்.பி.கள் வாக்களிப்பு

Pagetamil

பல இலட்சம் கோடி சொத்தை உதறிவிட்டு பௌத்த பிக்குவான இலங்கைத் தமிழரின் மகன்!

Pagetamil

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 27 பேர் பலி

Pagetamil

உக்ரைன் போரை நிறுத்த சிறப்பு தூதரை நியமித்த ட்ரம்ப்

Pagetamil

உக்ரைனை தாக்கியது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையல்ல: ரஷ்யாவின் புதிய ஏவுகணை பரிசோதனை!

Pagetamil

Leave a Comment