நீர்கொழும்பு குளத்தில் சிறிய மீன்பிடி படகு கவிழ்ந்ததில் காணாமல் போன தந்தை மற்றும் மகளின் சடலங்கள் நீர்கொழும்பு முனக்கரே சிறிவர்தன்புர குளத்தில் திங்கட்கிழமை (25) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மீன்பிடி படகு துரதிஷ்டவசமாக கவிழ்ந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரணில் பெர்னாண்டோ (50) அவரது மூத்த மகளான நிலுஷா நெத்மி பெர்னாண்டோவும் (18) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டிலிருந்து வந்த அருட்தந்தை, உறவினர்கள் ஏழுபேருடன் சிறிய மீன்பிடி படகில் பயணித்துள்ளனர். இவர்களில் உயிரிழந்த தந்தையும், மகளும் உள்ளடங்குகின்றனர்.
எனினும், படகு கவிழ்ந்ததைக் கண்ட அருகிலிருந்தவர்கள் இந்த சிறிய படகில் பயணித்த கத்தோலிக்க தந்தை மற்றும் நால்வரை விரைவாக காப்பாற்றிய போதிலும், நீரோட்டம் அதிகரித்ததால் தந்தையையும் மகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் இருவரும், திங்கட்கிழமை (25) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.