– கருணாகரன்
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் உச்ச அதிர்ச்சியை ஏற்படுத்தியது மருத்துவர் அருச்சுனாவின் வெற்றியாகும். அருச்சுனாவைத் தெரிவு செய்தவர்களுக்கும் அவரை ஆதரிப்போருக்கும் அருச்சுனாவின் வெற்றி, இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ஆனால், நிதானமாகச் சிந்திப்போருக்கு நிச்சயமாகப் பேரதிர்ச்சியையே அளித்துள்ளது.
காரணம் –
1. அருச்சுனா தேர்தலில் போட்டியிட்டபோது தெளிவாக எத்தகைய அரசியல் கொள்கைகளையும் முன்வைக்கவில்லை. ஏன், தேர்தலில் வெற்றியீட்டிய பிறகும் கூட தான் என்ன செய்யப்போகிறேன்? தன்னுடைய லட்சியம் என்ன? அரசியல் ரீதியாகத் தன்னுடைய திட்டங்கள் என்ன? நடவடிக்கைகள் என்ன என எதையும் தெரிவிக்கவில்லை. குறைந்த பட்சம், மருத்துவ உலகத்தில் நிலவுகின்ற அல்லது அவரே வெளிப்படுத்திய பிரச்சினைகள், குறைபாடுகளைப் போக்குவதற்கு அரசியல் ரீதியாகத் தான் என்ன நடவடிக்கை எடுப்பேன் என்பதைக் கூட அவர் தேர்தலின்போதும் சரி, பின்பும் சரி பேசவேயில்லை. அதற்கு எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. பதிலாக வாய்க்கு வந்தபடி எல்லாவற்றையும் பேசுகிறார், எல்லோரையும் திட்டுகிறார், பகடி பண்ணுகிறார். எல்லாவற்றையும் முசுப்பாத்தியாக அணுகுவதே தன்னுடைய அணுகுமுறை என்பதாகவே அவருடைய நடவடிக்கைகள் இருந்தன; இருக்கின்றன.
2. மருத்துவ உலகத்திலும் அருச்சுனாவின் விமர்சனங்களும் கலகச் செயற்பாடுகளும் கடுமையான வாதப் பிரதிவாதங்களை உண்டாக்கியிருந்தது. மருத்துவ மனைகளில் நிலவிய குறைபாடுகள், பொறுப்பின்மைகள், நிர்வாக ஒழுங்கின்மைகளைக் குறித்து அருச்சுனா எழுப்பிய கேள்விகளும் முன்வைத்த விமர்சனங்களும் மக்களிடத்தில் (சமூகத்தில்) பெரும் வரவேற்பைப் பெற்றது. அது அருச்சுனா மீதான மதிப்பை மக்களிடம் உண்டாக்கியது. ஆனால், அதற்குப் பதிலாக பெரும்பாலான மருத்துவர்களிடத்திலும் மருத்துவமனைச் சூழலிலும் அதற்கு எதிர்மறையான அபிப்பிராயமே இருந்தது. அநேகமான மருத்துவர்கள் அருச்சுனாவை உள்ளும் வெளியுமாகக் கண்டித்தனர்; வெறுத்தனர். அவருடைய நடவடிக்கைகள் தவறென வழக்கத் தொடுக்கப்பட்டது. மருத்துவர்களும் மருத்துவத்துறையினரும் மட்டுமல்ல, வெளியே உள்ளவர்களும் அருச்சுனா வெளிப்படுத்திய விடயங்களைக் குறித்த கேள்விகளை எழுப்பினர். இந்தக் கேள்விகள் ஏன் எழுந்தன என்றால், அருச்சுனா மருத்துவத்துறையில் பணியாற்றத்தொடங்கி, பத்து ஆண்டுகளாகின்றன. இந்தக் காலப்பகுதியில் அவர் பணியாற்றிய இடங்களில் (சாவகச்சேரி மருத்துவமனைக்கு அவர் வரமுன்) பிரச்சினைகள் இருக்கவில்லையா? அதற்கெல்லாம் அருச்சுனாவின் எதிர்வினைகள் எப்படியிருந்தன? ஏன் அதைப்பற்றியெல்லாம் அவர் கேட்கவில்லை? பொது அரங்கில் பேசவில்லை?
3. பகடி போலவே தேர்தலில் போட்டியிட்டார் அருச்சுனா. பரப்புரையின்போது கூட அவரோ, அவருடைய அணிகளோ திட்டவட்டமாக எந்த விடயங்களையும் தெளிவாகப் பேசவில்லை. அருச்சுனாவினுடைய அநேகமான நடவடிக்கைகளும் நடத்தைக் கோலங்களும் கோமாளித்தனமானவையாக – பகடியாகவே – இருந்தன. இப்போதும் கூட அப்படித்தானிருக்கிறது. தன்னுடைய சொந்த வாழ்க்கையுடன் தொடர்புடையோர் மற்றும் பெண்கள் குறித்த அருச்சுனாவின் விமர்சனங்களும் மோசமானவையாகவே உள்ளன.
4. கட்சிக் கட்டமைப்போ, அரசியல் அறிவோ, அனுபவமோ இல்லாத வேட்பாளராகவே களமிறங்கினார் அருச்சுனா. (இது அருச்சுனாவுக்கு மட்டுமல்ல, தேர்தலில் போட்டியிட்ட பலருக்குமுரியது).
இவ்வாறான காரணங்கள், அருச்சுனா பெற்றிருக்கும் அரசியல் வெற்றியைக் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. மட்டுமல்ல, அருச்சுனா அரசியலுக்கு வந்த வழிமுறையைக் குறித்தும் சிந்திக்க வைக்கிறது.
அருச்சுனா அரசியலுக்கு வந்த பின்புலம்:
தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே அருச்சுனா, சர்ச்சைக்குரியவராகியிருந்தார். சர்ச்சையை உருவாக்கியதே அருச்சுனாதான். பிறகு அதை அவர் தன்னுடைய பாணியில் வளர்த்தெடுத்தார். அப்போதே அதனுடைய உள்நோக்கத்தைக் குறித்து பல விதமான ஊகங்கள் தெரிவிக்கப்பட்டன; பேச்சுகள் அடிபட்டன. முக்கியமாக இரண்டு விடயங்களில் சந்தேகிக்கப்பட்டது அல்லது ஊகிக்கப்பட்டது. ஒன்று, அருச்சுனாவை வெளிச் சக்திகள் கையாள்கின்றன; தூண்டுகின்றன என்பது. இரண்டாவது, அருச்சுனா, அரசியலைக் குறி வைத்து இயங்குகிறார்; இயக்கப்படுகிறார் என்பது.
இந்தச் சந்தேகங்களுக்கும் ஊகங்களுக்கும் இப்பொழுது ஓரளவுக்குத் தெளிவாகப் பதில் கிடைத்துள்ளது. இப்பொழுது அருச்சுனா ஒரு அரசியல்வாதியாகி விட்டார். பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்பட்டுமுள்ளார்.
தொடக்கப்புள்ளி:
சாவகச்சேரி மருத்துவ மனையில் நிர்வாக மோதல்களை அருச்சுனா உருவாக்கினார். அந்த மோதல்களுக்கு அவர் எடுத்த ஆயுதம், அங்கே மாபெரும் ஊழல் நடக்கிறது. ‘மக்களுக்கான பணிகளை – நோயாளிகளுக்கான சிகிச்சைகளை – ச் செய்வதற்கு மருத்துவர்கள் பின்னிற்கிறார்கள். இறந்தவர்கள் உடல்களை பிரேத அறையிலிருந்து வெளியே எடுப்பதற்குக் கூட பணம் கறக்கப்படுகிறது. அதைக் கேட்க வேண்டிய நிர்வாகம் சோர்ந்து போய்க்கிடக்கிறது. இதற்குக் காரணம், இந்த மருத்துவர்கள் மக்களின் நலனை விட வெளியே, தனியார் மருத்துவ மனைகளில் தாம் இன்னொரு உழைப்பை இலக்கு வைத்துச் செயற்படுவதாகும். அதற்காக மருத்துவமனையை வேண்டுமென்றே செயலிழப்புச் செய்கின்றனர். ஆனால், மருத்துவத்துக்குத் தேவையான உபகரணங்களும் மருந்துப் பொருட்களும் தாராளமாக உண்டு. இருந்தும் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைப்பதில்லை. அப்படியென்றால், அதற்கான பொறுப்பை மருத்துவ நிர்வாகம் ஏற்க வேண்டும்‘ என்பதாக இருந்தது.
மொத்தில் ‘மருத்துவ உலகமே ஒரு மாஃபியாக் கும்பல்தான்‘ என்ற விதமாக அருச்சுனா மருத்துவ சமூகத்துக்கெதிரான குற்றச்சாட்டைப் பகிரங்கமாக முன்வைத்தார். (இதில் எவ்வளவு உண்மை உண்டு என்பது வேறு கதை)
மக்கள் இதை அப்படியே ஏற்று, அருச்சுனாவைத் தூக்கிக் கொண்டாடினார்கள். ஓரிரவில் மக்களின் நாயகன் ஆகினார் அருச்சுனா. அருச்சுனாவைச் சுற்றிக் குவிந்தன ஊடகங்கள். முக்கியமாக யுடியூப்பர்ஸ். யாழ்ப்பாணத்தின் தலைப்புச் செய்தியாகினார் அருச்சுனா. இந்தப் பிரபலப்படுத்துதலே அருச்சுனாவின் முதலாவது முதலீடாகும்.
சனங்கள் இப்படி அருச்சுனாவைத் தூக்கிக் கொண்டாடக் காரணம் (தேர்தலில் அருச்சுனாவின் வெற்றிக்கான காரணமும்தான்) சாவகச்சேரியில் மட்டுமல்ல, பல அரச மருத்துவமனைகளிலும் நிலவுகின்ற குறைபாடுகளையும் மருத்துவ அதிகாரத்தையும் அருச்சுனா துணிச்சலோடு பகிரங்கமாகப் பேசியதாகும்.
மருத்துவமனைகளில் அதிருப்தியீனங்கள் பொதுவாகவே காணப்படுவதுண்டு. எப்படித்தான் மருத்துவச் சேவையைச் செய்தாலும் நோயாளிகளுக்கும் அவர்களைச் சேர்ந்த உறவினர்களுக்கும் ஏதோ ஒரு போதாமை உணர்விருக்கும். இன்னும் சற்றுச் சிறப்பாகச் செய்திருக்கலாம். அல்லது இன்னும் விரைவாகச் செய்திருக்கலாம் என்றவாறாக. இது உளவியல் சார்ந்த பிரச்சினை. உலகம் முழுவதிலும் காணப்படுவது. அதை விட எங்களுடைய மருத்துவச் சூழலில் மறுக்க முடியாத அளவுக்கு (சில இடங்களில் கூடுதலாகவும் சில இடங்களில் குறைவாகவும்) அசமந்தப் போக்கும் அதிகாரமும் உண்டு.
போதாக்குறைக்கு அரச மருத்துவமனைகளில் வேலைசெய்கின்ற மருத்துவர்களிற் சிலர், தனியார் மருத்துவமனைகளிலும் வேலை செய்கின்றனர். அரச மருத்துவமனைகளில் காட்டப்படும் அக்கறையை விட தனியார் மருத்துவமனைகளில் இவர்கள் காட்டுகின்ற அக்கறை கூடுதலாக இருக்கிறது. இதெல்லாம் சனங்களிடம் கோவத்தை அடிமனதில் கனலாக வைத்திருந்தது. அதையெல்லாம் பெற்றோலை ஊற்றிப் பற்றியெரிய வைத்தார் அருச்சுனா.
ஒரு மருத்துவராக இருந்து கொண்டே, மருத்துவ உலகம் விடுகின்ற குறைபாடுகளையும் தவறுகளையும் பேசுகிறார், தட்டிக்கேட்கிறார் அருச்சுனா. இதற்கு எவ்வளவு துணிச்சல் வேணும் என்று நன்றிப் பெருக்கில் முதியோர் கூட பகிரங்கமாகப் பேசியதுண்டு. முன் பின் அறிமுகமில்லாத இளைஞர்கள் கூட அருச்சுனாவின் தீவிர ஆதரவாளர்களாகினார்கள்.
ஏனென்றால் மக்கள் தினமும் சந்திக்கின்ற இந்தப் பிரச்சினைகளையோ அல்லது இது போன்ற வேறு எந்தப் பிரச்சினைகளைப் பற்றியும் எந்த அரசியற் தலைவர்களும் அரசியல்வாதிகளும் பேசியதில்லை. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு முயற்சித்ததுமில்லை. பதிலாக அனைத்து நிர்வாகக் குறைபாடுகளையும் ஊழலையும் அத்தனைபேரும் அடைகாத்தே வந்தனர் என்ற கோபமும் மக்களிடமிருந்தது. ஏன் மக்கள் அமைப்புகள், ஊடகங்கள் கூட இந்தப் பிரச்சிகளைப் பற்றி அக்கறைப்பட்டது கிடையாது. இந்த இடத்தில்தான் அருச்சுனா ஒரு மாறுதலாக – மக்களின் பிரச்சினைகளோடு நிற்பவராகத் தென்பட்டார். இதனால் கேள்விக்கிடமில்லாத அளவுக்குக் கொண்டாடக்கூடியவராகினார். ஆனால், அருச்சுனா பிரச்சினைகளைப் பேசினாரே தவிர, அவற்றுக்கு எந்தத் தீர்வையும் பெற்றுக் கொடுக்கவே இல்லை.
இன்றைய மனநிலையில் பிரச்சினைகளைப் பேசுவோரே விரும்பப்படுகிறார்கள். தீர்வைக் காண்பவர்களை அல்ல என்பதை பல இடங்களிலும் காண முடியும். சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களின் தெரிவும் இதையே உறுதிப்படுத்துகிறது. தீர்வைக் காண விளைவோரை அல்ல, அவற்றைப் பேசுவோரே விரும்பப்படுகிறார்கள் என்பதை.
எப்படியோ உருவாகிய இந்த மக்கள் ஆதரவு அருச்சுனாவை நிதானமிழக்க வைத்தது. விளைவாக நிர்வாக விதிமுறைகளைக் கடந்து செயற்படுவதற்கு முயற்சித்தார் அருச்சுனா. அதைத் தடுக்க முற்பட்டது நிர்வாகம். மீற முற்பட்டார் அருச்சுனா. பிரச்சினை, நிர்வாக மட்டம், சமூக மட்டம் ஆகியவற்றைக் கடந்து சட்ட விவகாரம், நீதிமன்றம், சிறை என மாறியது இதெல்லாம் பொது மக்களுக்கு ஒரு சினிமாக் காட்சிகளாக – சாகஸக் காட்சிகளாகத் தெரிந்தன.
மக்களுக்காக நியாயத்தைத் தட்டிக் கேட்ட அருச்சுனாவை நிர்வாக அதிகாரிகள் பழிவாங்குவதற்காகத் தண்டிக்கின்றனர் என்ற அபிப்பிராயம் மக்களிடத்திலே உருவாகியது. அது அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்கியது. சாவகச்சேரியிலிருந்து அருச்சுனா வேறிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது கூட நிர்வாக ரீதியான பழிவாங்கல் என்ற கருத்தே இன்றளவும் மக்களிடத்தில் உண்டு.
ஆனால், அருச்சுனாவின் நடவடிக்கைகளில் குறைபாடுகளிருந்தன. அதனால்தான் அவரைச் சட்டமும் நீதிமன்றமும் கட்டுப்படுத்தின. உதாரணம், மன்னார் மருத்துவமனைக்குள் அத்துமீறிப் புகுந்து செயற்பட முற்பட்டபோது அவர் கைது செய்யப்பட நேரிட்டது. அதற்கு முன் சாவகச்சேரி மருத்துமனைக்குள் நிர்வாக உத்தரவுக்கு மாறாகச் செயற்படுவதற்கான தடையை நீதிமன்றம் விதித்ததை மீறியபோதும் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட அருச்சுனா விடுதலையாகி வந்தபோது மக்கள் திரண்டு அவரை வரவேற்றனர்.
இதெல்லாம் சினிமாக்களில் வருகின்ற நாயகக் காட்சிகளைப் போலிருக்க, அருச்சுனா பிரபலமாகிக் கொண்டேயிருந்தார். அருச்சுனாவுடைய இயல்புகளில் ஒன்று, எந்தப் பாதகமான விளைவையும் நெருக்கடியையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் கெட்டித்தனமும் எது வந்தாலும் பரவாயில்லை, அதை நெற்றிக்கு நேரே சிரித்துக் கொண்டு எதிர்கொள்வேன் என்று (முரட்டு) துணிச்சலுமே.
இந்தக் குணாம்சம் அருச்சுனாவினுடைய இளமைக்காலத்திருந்தே உள்ளது என அவரை நீண்டகாலம் அறிந்த நண்பர்களும் உறவினர்களும் சொல்கிறார்கள். தன்னுடைய சொந்த வாழ்க்கை விடயங்களைக் கூட பகிரங்க வெளியில் எந்தத் தயக்கமுமில்லாமல் தனக்குத் தோன்றுகின்ற வகையில் வெளிப்படுத்தும் குணம் அருச்சுனாவினுடையது. தனக்கு எத்தனை பெண்களுடன் உறவிருந்தது என்பதைச்சொல்வதற்கு் தயங்கப் போவதில்லை என்ற மாதிரி. ஆம், யாருக்கும் கட்டுப்பட்டிருப்பதுமில்லை. யாரையும் எதனையும் அவர் பொருட்படுத்துவதுமில்லை. தன்னுடைய கையிலும் பணமில்லை. வங்கிக் கணக்கிலும் காசில்லை என்று சொல்லி ஒரு Sympathy யை உருவாக்கினார்.
இதே Sympathy யைத்தான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பிறகும், அதற்கான படிவங்களில் பதிவிடுவதற்கு தனக்கொரு முகவரியில்லை. தனக்கென்றொரு வீடில்லை என்று சொல்லி மக்களை நெகிழ வைத்திருக்கிறார். இனித்தான் தானொரு வீடு கட்டவுள்ளதாகவும் அதற்கு முன் தனக்கொரு வீடோ கடையோ தர முடிந்தால் உதவியாக இருக்கும் எனவும் அவர் கேட்பதுமாகும். கூடவே தன்னுடைய வாகனச் சாரதிக்கு சம்பளம் கொடுப்பதற்கு உதவி தேவை என்று கேட்பதும். எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்துவதன் மூலம் தன்னை ஒரு Transparent ஆகக் காட்டுகிறார்.
ஆனால், இந்த மாதிரியான விளையாட்டுகளால் அவருடைய சொந்த வாழ்க்கையே கடுமையான விமர்சனத்துக்குரியதாகியிருக்கிறது. அதைப்போல அவருடைய நெருங்கிய உறவுகளோடும் சிக்கலான – நெருக்கடியான ஒரு நிலையே உண்டு. அவருடைய காதல்கள், கும்ப வாழ்க்கை, கடந்த கால – தற்போதைய நட்புச் சூழல், அரசியல் உறவுகள், பொதுவாழ்க்கை எல்லாவற்றிலும் தான்தோன்றித்தனம் அல்லது மாறுபாடான ஒரு போக்கே காணப்படுகிறது.
ஆனால் இதை மேலோட்டமாகப் பார்க்கும்போது, அருச்சுனா மீது இரக்கமும் அன்பும்தான் பலருக்கும் ஏற்படும். ஏனென்றால், எதையும் அவர் மக்களோடு பகிர்ந்து கொள்கிறார். அப்படிப் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனக் கருதுகிறார். மக்களுக்கும் தனக்கும் இடையில் எந்த வகையான ஒளிவு மறைவும் இருக்கத் தேவையில்லை. தன்னுடைய பலமோ பலவீனமோ எதுவாக இருந்தாலும் அதைத் தான் மறைக்கப்போவதில்லை. அப்படி மறைப்பது தவறு. ஏனைய அரசியல்வாதிகளும் சமூகப் பிரமுகர்களும் இரட்டை வாழ்க்கை வாழ்வதைப்போல இல்லாமல், பலமோ பலவீனமோ சரியோ தப்போ அதை மக்களுக்குத் தெரிவிப்போம். அதை மக்கள் தீர்மானிக்கட்டும் என்று காட்டுகின்ற ஒரு உத்தியை அருச்சுனா கையாள்கிறார்.
அருச்சுனாவின் இந்தப் போக்குப் பலருக்கும் பிடித்துள்ளது. அவர் தவறு செய்கிறார். அல்லது அவருடைய கதை பிழை என்றாலும் அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தாமல் கடந்து விடவே முயற்சிக்கின்றனர்.
ஆனால் இது பலருக்கு உவப்பானதாக இல்லை. அவருடன் எந்த அடிப்படையில் தம்மால் உறவைப் பேண முடியும்? எப்படிச் சேர்ந்து செயற்பட முடியும் என்ற கேள்வியோடு விலகி விடுகிறார்கள். பொதுப்புத்தியில் இயங்குவோரில் ஒருசாராருக்கு அருச்சுனாவின் நடவடிக்கைகள் ஒரு ஹீரோயிஸமாகத் தோன்றும். சற்று நிதானமாகச் சிந்திப்போர் இதிலிருந்து விலகியிருப்பர். அவருடைய ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு நடவடிக்கையும் நிதானிகளைத் தூரத் தள்ளி வைக்கும்.
ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்திக் கொள்வதில்லை அருச்சுனா. எதைப்பற்றிய பொருட்டும் இல்லாமல் தன்போக்கில் செயற்படுகின்ற – ஒரு மாறுபட்ட ஆளுமையாகவே தோன்றுகிறார். இதுதான் இன்றைய பின்நவீனத்துவ காலத்தின் உளவியற் கூறுகளில் ஒன்றாகும். இன்றைய வெகுஜன உளவியல் (Mass Psychology) இந்த அடிப்படையில்தான் கட்டமைந்து வருகிறது. ஆகவே அந்த வெகுஜன உளவியலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் அருச்சுனா. குறிப்பாக Negative publicity யை.
இதை அறிந்தோ அறியாமலோ அருச்சுனாவைச் சுற்றி அரசியற் தரப்புகள், சமூக வலைத்தளங்கள், யுடியூப்பர்கள் உள்ளடங்கலாக அனைத்து ஊடகங்களும் குவிந்தன, குவிகின்றன. எதிர்காலத்தில் குவியப்போகின்றன. ஊடகங்கள் குவியக் குவிய அருச்சுனா அவற்றுக்குத் தீனி கொடுப்பதற்கேற்றவாறு சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டேயிருந்தார். முக்கியமாக யுடியூபர்களுக்காக அருச்சுனா வேலை செய்தார். யுடியூபர்கள் அருச்சுனாவுக்காக வேலை செய்தனர். அருச்சுனாவுக்கு பிரபலம் தேவை. யுடியுபர்களுக்கு டொலர் தேவை. இதில் சமூக நன்மைளைக் குறித்த சிந்தனையெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
சர்ச்சைகளின் நாயகனாக மாறினார் அருச்சுனா. சர்ச்சைகளின் வழியாகவே பிரபலத்தை எட்டினார். தொடர்ந்து தன்னைப்பிரபலப்படுத்திக் கொள்வதற்காகவே சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார். அதாவது தன்னை ஒரு பேசு பொருளாக்கினார். சரியாகச் சொன்னால், சர்ச்சைதான் அருச்சுனாவைப் பரவலான அறிமுகத்துக்குக் கொண்டு சென்றது. அதுவே அருச்சுனாவை மக்களிடத்திலே அறிமுகமாக்கியது. அதுவே அருச்சுனாவுக்கான வெற்றியையும் தீர்மானித்தது. கவனிக்க வேண்டும், அருச்சுனா மக்களுக்கோ நோயாளர்களுக்கோ ஆற்றிய பணிகளால் அல்ல என்பதை. அவர் மருத்துவத்துறையிலும் அதற்கப்பால் சமூகச் செயற்பாட்டிலும் இதுவரையில் சிறப்பான பங்களிப்புகள் எதையும் செய்ததாக தகவல் இல்லை. ஆகவே அருச்சுனாவின் சர்ச்சைகள்தான் அவருக்கான பிரபலமும் அரசியல் முகவரியுமாகும்.
இவை மட்டும் அருச்சுனாவின் வெற்றியை உறுதிப்படுத்தவில்லை. இதற்கு மேலே அருச்சுனாவை நியாயப்படுத்தியவையும், அவரை அங்கீகாரம் செய்தவையும் உண்டு. அவற்றையும் பட்டியற்படுத்திக் கொள்ளலாம்.
முக்கியமாக –
அரசியல்தலைவர்களின் குறைபாடுகள்:
சாவகச்சேரி மருத்துவமனையில் பணிக்குறைபாடுகளும் நிர்வாகப் பிரச்சினைகளும் உண்டென்று அருச்சுனா ராமநாதன் குண்டை வெடிக்க வைத்தபோது, அது மக்களிடத்திலே தீயாகப் பற்றியதைக் கண்டவுடனே விழுந்தடித்துக் கொண்டு அங்கே சென்றார் அங்கயன் ராமநாதன். அங்கே மின்பிறப்பாக்கி ஒரு பிரச்சினையாக உள்ளது எனக் கண்ட அங்கயன், அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
இதைப் பார்த்த டக்ளஸ் தேவானந்தா, அங்கயனுக்கு முன்பாகத் தன்னுடைய செல்வாக்கை உயர்த்த முற்பட்டு அதிகாலையிலேயே சாவகச்சேரி மருத்துவமனைக்குச் சென்றார். அப்பொழுது அவர் அமைச்சராகவும் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராகவும் இருந்ததால் நேரடியாக நிலைமைகளை அவதானிப்பதாக ஒரு தோற்றத்தைக் காட்டினார். கூடவே அவருக்கிசைவான ஊடகவியாளர்களும் யுடியுப்பர்ஸ்களும் அழைத்துச் செல்லப்பட்டனர். டக்ளஸ் தேவானந்தா சென்றபோது, பிரச்சினை பொலிஸ் மட்டத்துக்குச் சென்று விட்டது. பொலிசாரின் நடவடிக்கைகளில் தலையீடு செய்து பிரச்சினையை மட்டுப்படுத்துவதிலும் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதெல்லாம் போதாதென்று கஜேந்திரன், சிறிதரன் போன்ற அரசியல்வாதிகளும் அருச்சுனா அலையைக் கண்டு உடனே களத்துக்கு விஜயம் செய்தனர். ஆனால், அவர்கள் ஒரு எல்லையோடு தங்களை மட்டுப்படுத்திக்கொண்டு, பாராளுமன்றத்தில் அந்த விவகாரத்தைப் பேசினார்கள்.
இவையெல்லாம் அருச்சுனாவை புகழடைய வைத்தன. அருச்சுனா சொல்வது சரியெனவும் அதைப் பற்றியெல்லாம் பாராளுமன்றத்தில் பேசும் அளவுக்கு அருச்சுனாவின் போராட்டங்கள் வலுவானவை என்றும் ஒரு உணர்வு மக்களிடத்தில் ஏற்பட்டது. இதே உணர்வு பல மடங்காகப் பெருகியது புலம்பெயர்ந்த மக்களிடத்திலே.
அவர்கள் அருச்சுனாவுடன் நேரடியாகவே பேச விரும்பினர். பேச முற்பட்டனர். ஏன் பலர் நேரடியாகப் பேசவும் நிதிப் பங்களிப்புகளைச் செய்யவும் தொடங்கினார்கள். இவை அருச்சுனாவுக்கும் அவரை ஆதரித்தோருக்கும் உற்சாகத்தைக் கொடுத்தது. அருச்சுனா அரசியலில் இறங்க வேண்டும். அவர் அரசியலில் ஈடுபட்டால்தான் துணிச்சலாகப் பல விடயங்களை வெளியே கொண்டு வர முடியும். அம்பலப்படுத்த முடியும். என்ற அபிப்பிராயம் தோன்றியது.
இந்தப் பின்புலம் அருச்சுனாவை உற்சாகப்படுத்தியது. அவருடைய இயல்பை இது இன்னும் ஊக்குவித்தது. அந்த உற்சாகத்தோடு அருச்சுனா சில அதிரடி ஆட்டங்களை நடத்தினார்.
அங்கயன், டக்ளஸ் தேவானந்தா, சிறிதரன், கஜேந்திரன் எல்லோரையும் இழுத்துப் பேசினார். துணிச்சலோடு அவர்களை விமர்சித்தார். பகடி பண்ணினார். கேலிப்படுத்திச் சிரித்தார்.
வழமையாக எந்த அரச உத்தியோகத்தர்களும் அதிகாரிகளும் இந்த மாதிரி நேரடியாக அரசியல்வாதிகளை விமர்சிப்பதில்லை. அதிலும் அதிகாரத்திலிருப்போருடன் நேரில் முட்டிக் கொள்ளவே மாட்டார்கள். இடமாற்றம், பணி உயர்வு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற முன்னெச்சரிக்கையினால் மௌனமாகவே இருப்பார்கள். ஆனால், அருச்சுனா இதையெல்லாம் பொருட்படுத்தாமல், தனக்கு இடமாற்றம் வந்தாலென்ன விட்டாலென்ன? பதவி உயர்வு கிடைத்தாலென்ன விட்டாலென்ன என்ற மாதிரிச் செயற்பட்டார். ஆகவே அரசியல்வாதிகளோடு பகடி போலச் சீண்டிச் சீண்டி விளையாடிக் கொண்டிருந்தார். அதிகாரிகள் தொடக்கம் அரசியல்வாதிகள் வரையில் எல்லோரையும் இழுத்து வைத்துச் சீண்டிக் கேலிப்படுத்துவது சனங்களுக்கு ருசியாக இருந்தது. தங்களால் செய்ய முடியாததை தனியொருவராக நின்று அருச்சுனா செய்கின்றார் என அவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.
சனங்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்:
அருச்சுனாவின் கருத்துகளும் அவருடைய சீண்டல்களும் விமர்சனங்களும் ஒரு தரப்பினருக்கு (குறிப்பாகப் பொதுமக்களில் ஒரு சாராருக்கு) ருசியான கொண்டாட்டமாகியது. அவரைத்துணிச்சலான – நேர்மையான மருத்துவர் எனப் பலரும் நம்பினார்கள். மருத்துவ உலகத்தின் மாஃபியாத் தனத்தைத் தயவு தாட்சண்யமின்றி எதிர்க்கிறார், அம்பலப்படுத்துகிறார் என்று கருதும் சூழல் உருவாகியது. இப்படி நம்பக் கூடியவாறு சாவகச்சேரி தொடக்கம் பல மருத்துவமனைகளில் சற்று வினைத்திறன் கூடிய சேவைகள் அல்லது சற்றுக் கவனமாக வேலை செய்ய வேணும் என்பது நடக்கத் தொடங்கியது. இதெல்லாம் அருச்சுனாவினால்தான் ஏற்பட்ட மாற்றம் என்று சனங்கள் நம்பினார்கள். மருத்துவ உலகத்தில் மட்டுமல்ல, பிற அரச துறைகளிலும் சற்று விழிப்பான முறையில் சேவைகள் நடந்தன.
எவராலும் செய்யாமல் விடப்பட்ட, செய்யக் கடினமாக இருந்த மாற்றங்களை அருச்சுனா என்ற தனி மனிதர் செய்திருக்கிறார். இவர் அரசியலுக்கு வந்தார் இன்னும் பல மாற்றங்கள் நிகழும் எனச் சனங்களால் நம்பப்பட்டது. அதோடு அருச்சுனா ஏனைய மருத்துவர்களைப் போலின்றி, சாதாரண மக்களோடு வழியிலும் தெருவிலும் பம்பலாகவே பழகும் ஒருவராகவும் (Popular with common people) இருந்தார். அப்படித்தன்னைக் காட்டிக் கொண்டார். இது தாங்கள் எளிதாக நெருங்கக் கூடியதொரு மருத்துவர் – ஒரு பிரபலம் – என்ற உளநிலையாக மக்களிடம் வளர்ந்தது
அருச்சுனாவின் வெற்றிக்கான சூழல்:
அதிரடி ஆட்ட நாயகன் போலத் தன்னைச் சுற்றிக் கட்டியெழுப்பிய பிம்பத்தோடு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் அருச்சுனா. கூடவே அவரோடொத்தவர்கள் அணி சேர்ந்தனர். பின்னர் இவர்களுக்கிடையில் உள் முரண்பாடுகளிருந்தாலும் தொடக்கத்தில் எல்லோரும் ஒற்றுமையாகவே களமிறங்கினார்கள். இந்தத் தடவை வடக்குக் கிழக்கின் தேர்தற் களமே ஏறக்குறைய வித்தியாசமான ஒன்றாக இருந்தது. வழமைக்கு மாறாக ஏராளம் கட்சிகளும் அணிகளும் குழுக்களும் போட்டியிட்டன. அதில் ஒரு குழுவாக சுயேச்சைக் குழு 17 இல் அருச்சுனா அணி களமிறங்கியது.
வேட்புமனுக் கொடுத்தபோதே அருச்சுனாவுக்கான ஆதரவு அலை உருவாகத் தொடங்கியது. தொடக்கத்தில் அது மெல்லிய அளவிலேயே இருந்தது. புலம்பெயர் தமிழ் மக்களில் ஒருசாரார் அருச்சுனா வெற்றியடைய வேண்டும் என்று வேலை செய்யத் தொடங்கினார்கள். அதில் ஒரு தொகுதியினர் நிதி ஊட்டமும் செய்தனர். மெல்ல மெல்ல தன்னுடைய பரப்புரையை ஆரம்பிக்கத் தொடங்கினார் அருச்சுனா. தன்கூடவே கௌசல்யா என்ற பெண் வேட்பாளரை நெருக்கமாக வைத்துக் கொண்டார். இதை ஒரு உத்தியாகவே அருச்சுனா பயன்படுத்தினார். இது அருச்சுனா மீதான கவனத்தைக் கூடுதலாக உண்டாக்கியது. ஏனென்றால், ஏற்கனவே பல காதல்கள் தனக்கு உண்டென்றும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர் என்றும் பிறகு இன்னொரு திருமண உறவில் வாழ்கின்றார் என்றும் அறிந்திருந்த சனங்களுக்கு, கௌசல்யாவின் புதிய உறவு ஆச்சரியமே. எனவே அதைப்பற்றி அறியும் ஆர்வம் உண்டாகியது. சனங்களின் ஆர்வத்துக்குத் தீனி போடும் விதமாக அருச்சுனாவும் கௌசல்யாவுடன் நெருக்கத்தைக் கூட்டிக் காண்பித்தார். இந்தக் காணொளிகள் பரவின. அருச்சுனா ஊர்கள், தெருக்கள், சந்திகள், நகரப்பகுதி என எல்லா இடத்துக்கும் செல்லத் தொடங்கினார். அவர் நிற்குமிடத்தில் சனங்கள் கூடினர். குறிப்பாக இளைய தலைமுறை குவிந்தது. செல்பிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இப்படியே ஒரு அலை உருவாகி உயர்ந்தது. ஒரு கட்டத்தில் அருச்சுனாவின் செல்வாக்கு பெருகிச் செல்வதைப் பலரும் உணரக் கூடியதாக இருந்தது.
தேர்தற் களத்தில் அருச்சுனாவின் பரப்புரையில் பலவிதமான காட்சிகளிருந்தன. அவற்றையெல்லாம் இங்கே பட்டியலிட முடியாது. ஆனாலும் மூன்று நான்கு முக்கியமான விடயங்களைக் குறிப்பிடுவது அவசியமாகும்.
ஒன்று, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனையும் புலிகள் இயக்கத்தையும் தான் மதிப்பதாகவும் நேசிப்பதாகவும் காட்டிக் கொண்டார். கூடவே அந்த இயக்கத்தின் மாவீரர்களையும். ஆகவே அருச்சுனா தமிழ்த் தேசியத்தின் பக்கமும் நிற்கிறார் என்றொரு தோற்றம் உருவானது. ஆனால், அதற்கு முன் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க போன்றோருடன் எல்லாம் தனக்குத் தொடர்புண்டு. செல்வாக்குண்டு என்றொரு தோற்றத்தைக் காண்பித்திருந்தார். தேர்தலின்போது தென்னிலங்கை உறவைப்பற்றிப் பேசுவதைத் தவிர்த்தார். ஆகவே தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கின்ற வாக்குகளைக் கவரும் உத்தியைப் பயன்படுத்தினார்.
இரண்டாவது, தமிழ்த்தேசிய அரசியலை மேற்கொண்டோரையெல்லாம் தாக்கிப் பேசினார். பகடி பண்ணினார். பதிலாகத் தன்னை ஒரு துணிச்சலான மக்கள் சேவகன், மக்களுக்கான நாயகன், மக்களுக்காகச் சிறை சென்றவன் என்ற தோற்றப்பாட்டைக் கட்டியெழுப்பினார். கூடவே அரச சார்பாளர்களாக இருந்த டக்ளஸ் தேவானந்தா, அங்கயன் ராமநாதன் போன்றோருடைய அரசியலைப் பற்றி விமர்சித்து, அவர்களையும் பலவீனப்படுத்தினார். அவர்களுடைய வாக்குகளையும் மெல்லக் கவர்ந்தார். இதற்கு அவர் பயன்படுத்திய உத்தி, வெல்லப்போவது தேசிய மக்கள் சக்தியே. அதில் சுயேச்சைக் குழுவில் போட்டியிடும் தனக்கு சுகாதார அமைச்சுப் பதவி கிடைக்கும் எனச் சொன்னதாகும். (இப்படி நடக்காது என்று அருச்சுனாவுக்குத் தெரியும். ஆனாலும் அவர் அதை நம்ப வைத்தார்).
மூன்றாவது, வலுக்குன்றிப் போயிருந்த தமிழ்த்தேசியவாதச் சக்திகளின் பலவீனம். அவர்கள் எதையும் செய்ய முடியாதவர்கள் என்ற உணர்வு, அருச்சுனாவை நோக்கி மக்களைச் செல்ல வைத்தது.
நான்காவது, தெற்கிலே உருவாகி நாடு முழுவதும் விரிந்து கொண்டிருந்த மாற்றத்துக்கான – ஊழலுக்கெதிரான புதிய அரசியற் சூழலைப்போல அருச்சுனாவும் ஒரு புதிய அரசியற் சூழலை உருவாக்கப்போகிறார் என்று சனங்கள் நம்பியதாகும். அருச்சுனாவையும் அவர்கள் இதனோடுதான் இணைத்துப் பார்த்தனர். அதனால்தான் தேசிய மக்கள் சக்திக்கும் அருச்சுனா அணிக்கும் முன்னிலை கிடைத்தது. அருச்சுனா வெற்றியடைந்தார். ஆம், Controversial politician ஒருவர் நாட்டுக்கும் தமிழருக்கும் கிடைத்திருக்கிறார்.
ஆனால், இதையெல்லாம் அரசியற் கட்சிகளும் தலைவர்களும் புரிந்து கொள்ளவும் கணிப்பிடவும் தவறினர். ஏன் ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோரும் கூட அருச்சுனாவின் வெற்றியை எதிர்பார்க்கவில்லை. ஒரு புதிய ஆள், விசித்திரமான முறையில் அரசியற் களத்திலும் சமூக வெளியிலும் ஆடத் தொடங்கியுள்ளார். புதிய (NPP) அரசாங்கம் இதையெல்லாம் எப்படி அணுகப்போகிறது? அதுவே, ஊழல் ஒழிப்பு, சமூகச் சீரமைப்பு, மறுமலர்ச்சி, புதிய வாழ்க்கை என்று முதல் நிலையை எட்டும் பணிப்பட்டியேலோடு நிற்கும்போது, அதே பட்டோலையோடு நிற்கும் அருச்சுனாவுக்கு என்ன வகையான இடமிருக்கும்? மறுபக்கத்தில் மாவீரர், தலைவர் பிரபாகரன் என்று சொல்லிக் கொள்வதற்குப் போட்டியாளர்களாக சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோருள்ளனர். இந்த இரட்டை நெரிப்புக்குள் அருச்சுனாவின் இடமும் பயணமும் எப்படி இருக்கப்போகிறது?
அருச்சுனாவின் அடுத்த கட்டத்தை எதிர்வரும் நாட்களிலிருந்து காண முடியும்.
ஆம், உலகம்தான் எத்தனை விதமானது? எத்தனை விதமான மனிதர்களைக் கண்டிருக்கிறது – கொண்டிருக்கிறது!
00