அநுராதபுரம் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம், பரசங்கஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய சட்டத்தரணி, பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகொண்டு போதைப்பொருள் கடத்தல் மற்றும் சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருளை வழங்குவதற்கு தனது தொழிலை பயன்படுத்தியவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சட்டத்தரணி போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் கைதிகளுக்காக ஆஜராகுவதாக கூறி கைதிகளுக்கு ஹெரோயின் போதைப்பொருள், கஞ்சா, பீடி, சிகரெட், புகையிலை போன்றவற்றை வழங்கி வந்தது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய சட்டத்தரணி தொடர்பான நீண்ட விசாரணையின் பின்னர், நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள கடை பகுதியில் ஹெரோயின் நுகர்ந்து கொண்டிருந்த சட்டத்தரணி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள், கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பொலிஸார், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.