பாராளுமன்ற ஆசனம் தாருங்கள், மகிந்த ராஜபக்சவை மின்சாரக் கதிரையேற்றுகிறோம் என்றார்கள். ஒன்றுக்கு, இரண்டு ஆசனம் கிடைத்தது. ஏற்றினார்களா? இல்லை. தாம் பாராளுமன்றக் கதிரையேறினார்கள். அவ்வளவு தான். போர்க்குற்றம் தொடர்பிலோ, சர்வதேச குற்றவியல் பொறிமுறை தொடர்பிலோ ஒரு சிறு முயற்சிதேனும் இவர்கள் எடுக்கவில்லையென கூறியுள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
இன்று (5) வடமராட்சியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சி இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை ஆதரித்த தீர்மானத்தை எடுத்தவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் முக்கியமானவர். சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கிற முடிவை மட்டுமல்ல. ஆதரித்து பிரச்சாரக் கூட்டங்களையும் நடத்தியவர்கள் இவர்கள்.
இந்த முறை தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரித்த போது இவர்கள் என்ன சொன்னார்கள்? சிங்களவன் ஒருவரை மானத் தமிழன் ஆதரிப்பான என்றார்கள். கஜேந்திரகுமார் சும்மா சிங்களவரை அல்ல, இராணுவத் தளபதியையே ஜனாதிபதியாக ஆதரித்தவர்.
கூட்டமைப்பை யார் உடைத்தது? கூட்டமைப்பை ஆசனத்திற்காக முதலாவதாக உடைத்தவர் கஜேந்திரகுமார். 2010 பொதுத் தேர்தல் நியமன வழங்கலில் அவரது கட்சிக்கு அவர் கேட்ட நியமனங்கள் வழங்கப்படாததால், கொள்கை முரண்பாடு என்று பொய் சொல்லிக் கொண்டு கட்சிக்கு வெளியே சென்றவர் தான் கஜேந்திரகுமார். ஆசனம் கிடைக்காமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டு கொள்கைச் செம்மலாக வேடம் தாங்கும் ஏமாற்றுப் பிழைப்புக்கு பிள்ளையார் சுழி போட்டவர் அவர். அது இன்று வரை சங்காக, மாம்பழமாகத் தொடர்கிறது. ஆசனம் கிடைக்காததால், சைக்கிள் எடுத்து ஓடிவிட்டு இன்று வரை நாட்டில் நடப்பதெல்லாவற்றிற்கும் தமிழரசுக் கட்சி தான் காரணம் என்று வெற்று அரசியல் நாடகம் போட்டு வருகிறார்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்.
பாராளுமன்ற ஆசனம் தாருங்கள், மகிந்த ராஜபக்சவை மின்சாரக் கதிரையேற்றுகிறோம் என்றார்கள். ஒன்றுக்கு, இரண்டு ஆசனம் கிடைத்தது. ஏற்றினார்களா? இல்லை. தாம் பாராளுமன்றக் கதிரையேறினார்கள். அவ்வளவு தான். போர்க்குற்றம் தொடர்பிலோ, சர்வதேச குற்றவியல் பொறிமுறை தொடர்பிலோ ஒரு சிறு முயற்சிதேனும் இவர்கள் எடுக்கவில்லை.
ஒவ்வொரு முறையும் ஜெனீவா போய் கோப்பி குடித்து விட்டு வருவார்கள். ஒன்றையும் செய்வதில்லை. இங்கு வந்து எங்களைப் பார்த்து நாம் ஒன்றும் செய்யவில்லை என்பார்கள். ஏன் இவர்களுக்குக் கையில்லையா, கால் இல்லையா, மூளையில்லையா? மற்றவரைக் குறை சொல்வதைத் தாண்டி என்ன செய்தீர்கள்?
தையிட்டி விகாரை கட்டி முடியும் வரை பார்த்துக் கொண்டு இருந்து விட்டு, கட்டி முடிந்த பின்னர் போய் அங்கு பாசாங்கு காட்டி அரசியல் செய்கிறீர்கள். கட்ட முதலே ஏன் ஒன்றும் செய்யவில்லை. தையிட்டி அண்டிய தமிழர் காணி விடுவிப்பில் உங்கள் பங்கு என்ன? 2003 இல் மாவை சேனாதிராஜா மனுதாரராகி, நான் வைத்த வழக்கில் தான் ஆயிரமாயிரமாய் வலி வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. போரின் பின்னர் இந்த இடத்தில் இராணுவத்திடமிருந்து 11,000 ஏக்கரிலிருந்து 6000 ஏக்கராக பகுதி பகுதியாக நிலங்கள் விடுவிக்கப்பட்டது நாங்கள் வைத்த வழக்கிலே. நீங்கள் என்ன செய்தீர்கள்? 2013 இல் விடுவிக்காத நிலங்களை அரசுடமையாக்க விளைந்த போது அதையும் எதிர்த்து 2136 வழக்குகள் வைத்தோம். இன்னும் அவை மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. புலம்புவதை விடுத்து நீங்கள் என்ன செய்தீர்கள்?
உங்கள் கட்சியிலிருக்கும் ஓட்டைகளைப் பார்க்க ஆளில்லை. நீங்கள் தமிழரசுக் கட்சி உடைந்து விட்டதாக கண்ணீர் வடிக்கிறீர்கள். போன முறை உங்களைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த மணிவண்ணனிற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? இந்த முறையும் நீங்கள் இரண்டு குழுவாகப் பிரிந்து வாக்குக் கேட்பது எங்கள் கண்ணுக்குத் தெரியாமலில்லை.
நீங்கள் உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். மக்கள் உங்களுக்குக் கொடுத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்ற பணியைச் செய்தீர்களா என்பதற்கு மக்களுக்குப் பதில் சொல்லுங்கள். தொடர்ந்து தமிழரசுக் கட்சியை விமர்சிப்பதை அரசியல் மூலதனமாக்குவது பலிக்காது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இணைந்த வட-கிழக்குத் தேசமென முழங்கும் நீங்கள் போன தடவை கிடைத்த போனஸ் ஆசனத்தை கிழக்குக் கொடுத்தீர்களா? நீங்கள் அதை தேர்தலில் தோற்ற உங்கள் கஜேந்திரனுக்கு கொடுத்து விட்டு வட-கிழக்கு இணைப்பு என படம் போடுகிறீர்கள். கிழக்கில் அவ்வளவு கரிசனையென்றால் நீங்கள் கிழக்குக்கு அந்தப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொடுத்திருப்பீர்கள்.
உங்களுக்குக் கிழக்கில் கரிசனையில்லை. வாயளவில், தேர்தல் காலங்களில் ‘வவுனியாவில் நிலம் பறிபோகிறது, மட்டக்களப்பில் நிலம் பறிபோகிறது’ என்கிறீர்கள். குருந்தூர்மலை, வெடுக்குநாரி மலை, கிண்ணியா என்று ஒரு முன்னணி சட்டத்தரணி கதை அளக்கிறார்.
மக்களது வெகுஜனப் போராட்டங்களோடு, அத்தனை நிலங்களையும் வழக்கு வைத்துப் பாதுகாப்பது நாங்கள். வகுப்பெடுத்தவர் ஒரு சட்டத்தரணி, அவரை நான் இவை தொடர்பில் ஒரு நீதிமன்றப் பக்கமும் கண்டதில்லை. வழக்காடி வெல்வது நாங்கள். போராடுவது மக்கள். படமெடுத்து பேஸ்புக்கில் போடுவது நீங்கள்.
இன்றைக்கு P2P போராட்டம் தாங்கள் நடத்தியது என்ற முழுப் பொய்யொன்றை இன்று அவிட்டு விட்டிருக்கிறார்கள். எங்களைத் தொடர்ந்து விமர்சிக்கும் சிவாஜிலிங்கம் அப்போதே ஒரு பேட்டி கொடுத்திருந்தார் ‘சுமந்திரனும், சாணக்கியனும் இல்லாமல் P2P பொத்துவில்லைத் தாண்டியிராது’ என்று. மக்கள் அறிவார்கள். நீதிமன்றத் தடை உத்தரவுகள் அனைத்தையும் உடைத்து, போராட்டத்தைத் தொடங்கி முடித்தவர்கள் நாங்கள். நீங்கள் உங்கள் சுய இலாப, தேசிய வேடந்தாங்கல் அரசியலுக்காக வந்து அந்தப் போராட்டத்தில் ஒட்டிக் கொண்டீர்கள். மக்கள் அறிவார்கள் என்றார்.