மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கட்டணக் குறைப்பு போதுமானதாக இல்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கட்டண திருத்தம் தொடர்பான புதிய பிரேரணையை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.
இதன்படி, குறித்த பிரேரணையை எதிர்வரும் 8ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி இலங்கை மின்சார சபை, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணை ஒன்றை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.
அதன்படி, மின் கட்டணத்தை 4 முதல் 11 சதவீதம் வரை குறைக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்தது.
எவ்வாறாயினும், இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் பெற்ற இலாபத்துடன் ஒப்பிடுகையில் இலங்கை மின்சார சபையினால் குறைக்கப்படுவதாக உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டண வீதம் போதுமானதாக இல்லை என சில தரப்பினர் கருத்து வெளியிட்டிருந்தனர்.
எவ்வாறாயினும், புதிய பிரேரணையை சமர்ப்பித்ததன் பின்னர் எதிர் பிரேரணையை தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.