27.3 C
Jaffna
November 9, 2024
Pagetamil
இந்தியா

பேரவைத் தலைவர் அப்பாவு-வுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பேரவைத் தலைவர் அப்பாவு-வுக்கு எதிராக அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுகவி்ல் இணையத் தயாராக இருந்ததாகவும், ஆனால் அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார். பேரவைத் தலைவரின் இந்த பேச்சு அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி பேரவைத் தலைவர் அப்பாவு-வுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதி்க்கக்கோரியும் பேரவைத் தலைவர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது.

அப்போது, பேரவைத் தலைவர் அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘40 அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்ததாக பேரவைத் தலைவர் கூறியது தகவல் தானே அன்றி, அது அவதூறு ஆகாது. பேரவைத் தலைவரின் பேச்சால் பாபு முருகவேலுவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. பாதிக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள் யாரும் இந்த வழக்கைத் தொடரவில்லை.

அப்படியே வழக்கு தொடர்ந்தாலும் அவர்கள் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு பேரவைத் தலைவர் பேசவில்லை. எனவே இந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிட்டிருந்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து பாபு முருகவேல் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி வாதிட்டிருந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பேரவைத் தலைவர் அப்பாவு தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

இந்நிலையில், பேரவைத் தலைவர் அப்பாவு-வுக்கு எதிராக பாபு முருகவேல் தாக்கல் செய்திருந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், ‘பேரவைத் தலைவரின் பேச்சு குறித்து அதிமுக சார்பில் யாரும் புகார் அளிக்கவில்லை. மனுதாரர் தனிப்பட்ட முறையில் இந்த அவதூறு வழக்கைத் தொடர்ந்துள்ளார். இந்த அவதூறு வழக்கைத் தொடர கட்சி சார்பில் அவருக்கு எந்த அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என்பதால் இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தென்னிந்திய சீரியல்களில் நடித்த இலங்கை யுவதி போதைப்பொருளுடன் கைது!

Pagetamil

சல்மான் கானை தொடர்ந்து ஷாருக் கானுக்கும் கொலை மிரட்டல்: மும்பை போலீஸார் வழக்குப்பதிவு

Pagetamil

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ்-க்கு ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு வழங்க ஐகோர்ட் உத்தரவு

Pagetamil

கணவர் ஆசைப்படுவதாக சந்தேகப்பட்டதால் ஆத்திரம்: அமைந்தகரை சிறுமி கொலை வழக்கில் கைதான பெண் வாக்குமூலம்

Pagetamil

தொடரும் கனடா மற்றும் இந்தியா பகை

Pagetamil

Leave a Comment