முன்பள்ளி மாணவர்களின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த பஞ்சாயுதங்களை திருடிய தம்பதியரை மஹியங்கனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மஹிங்கனையில் உள்ள முன்பள்ளிக்கு தமது சிறிய மகளுடன் சென்ற கணவனும் மனைவியும், தமது மகளின் பிறந்தநாளுக்கு முன்பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆடை மற்றும் ஒரு ஜோடி காலணிகள் வழங்க வேண்டுமென வார்டன்களுக்கு அறிவித்துள்ளனர்.
இவ்வாறு வந்த அவர்கள் சிறுவர்களுக்கு ஆடை கொடுப்பதற்கு அளவீடு செய்வதாகக் கூறி முன்பள்ளி வார்டன்களை ஏமாற்றி பல பிள்ளைகளின் கழுத்தில் கட்டியிருந்த பஞ்சாயுதங்களை திருடிச் சென்றுள்ளனர்.
மஹியங்கனை மற்றும் ரீதிமாலியத்த பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள முன்பள்ளிகளின் சிறுவர்களிடமே பஞ்சாயுதங்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் பிரகாரம் திருடப்பட்ட பஞ்சாயுதத்துடன் தியத்தலாவ பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரும் கந்தானை பிரதேசத்தை சேர்ந்த பெண் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மஹியங்கனை பிரதேசத்தில் வாடகை வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதுதவிர, நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி பணம் வசூலிக்கும் மோசடியிலும் தம்பதியினர் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் அவர்களது மகளும் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.