2026 ரி20 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் காம்பியா என்கிற அணிக்கு எதிராக சிம்பாவே அணி 20 ஓவர்களில் 344 ரன்கள் அடித்து பழைய சாதனைகளையெல்லாம் உடைத்திருக்கிறது.
2026 ஆம் ஆண்டுக்கான ரி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்துகொண்டிருக்கிறது. இதில் ஆபிரிக்க பிராந்தியத்துக்கான தகுதிச்சுற்றுத் தொடரில் இன்று சிம்பாவே அணி காம்பியா அணியை எதிர்கொண்டிருந்தது. நைரோபியில் நடந்த இந்தப் போட்டியில் சிம்பாவே அணியின் கப்டனான சிக்கந்தர் ராசா, நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
காம்பியா அணி அனுபவமற்ற அணி என்பதால் முதலில் இருந்தே சிம்பாவே அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. ஓப்பனர்களான ப்ரையன் பென்னட், மருமனி என இருவரும் முதல் பந்திலிருந்தே அதிரடியை தொடங்கினர். சிக்சரும் பவுண்டரியுமாக பறக்கவிட்ட இவர்களின் ஆட்டத்தால் சிம்பாவே அணி பவர்ப்ளேயிலேயே 100 ரன்களை கடந்துவிட்டது. இருவருமே அரைசதத்தைக் கடந்து ஆட்டமிழந்தனர்.
நம்பர் 4 இல் கப்டன் ராசா களமிறங்கினார். அவரும் எதோ பந்துவீச்சு மெஷினின் பந்துகளை எதிர்கொள்வதைப் போல அத்தனை எளிதாக பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டார். மூஸா என்பவரின் ஓவரில் மட்டும் 4 சிக்சர்கள் இரண்டு பவுண்டரிகளுடன் 35 ரன்களை சேர்த்துக் கொடுத்தார். 33 பந்துகளிலேயே சதத்தை எட்டிவிட்டார். இதன் மூலம் டெஸ்ட் ஆடும் நாடுகள் சார்பில் அதிக வேகமாக சதமடித்த வீரர்களின் பட்டியலில் 35 பந்துகளில் சதமடித்திருந்த மில்லரின் சாதனையை ராசா முறியடித்தார். மொத்தமாக 43 பந்துகளில் 133 ரன்களை அடித்து ராசா கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சிம்பாவே அணி 344 ரன்களை எட்டியது. இதன் மூலம் சர்வதேச ரி20 போட்டிகளில் இதற்கு முன் அதிக ரன்கள் எடுத்திருந்த நேபாளத்தின் சாதனையை சிம்பாவே முறியடித்திருக்கிறது. நேபாள அணி மங்கோலியாவுக்கு எதிராக 314 ரன்களை எடுத்திருந்ததே இதுவரையிலான அதிகபட்சமாக இருந்தது. இன்னிங்ஸில் மொத்தம் 57 பவுண்டரிகள் இருந்தன – இது ஒரு ரி 20 சாதனையாகும் – நான்கு சிம்பாவே துடுப்பாட்ட வீரர்கள் ஐம்பதுக்கும் அதிகமான ஸ்கோர் அடித்தனர். இது மற்றொரு சாதனை.
மூசா ஜோர்பதே நான்கு ஓவர்களில் 93 ரன்களை விட்டுக்கொடுத்தார். ரி20 இல் ஒரு பந்துவீச்சாளர் விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.
345 ரன்களை விரட்டிய காம்பியா அணி 54 ரன்களில் ஆட்டமிழந்து விட்டது. சிம்பாவே அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது.