கடந்த காலங்களில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் வகையில் செயற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தற்போது அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுத் தேர்தலின் போது தனது பிரபலத்தை உயர்த்தும் முயற்சியில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பில் பேச ஆரம்பித்துள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நிர்வாக உறுப்பினரும் கண்டி மாவட்ட தலைவருமான கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கைகள் தன்னிடம் இருந்தால் பொறுப்புள்ள அரசியல்வாதி என்ற ரீதியில் விசாரணைக் குழுக்களிடம் கையளித்திருக்க வேண்டும் என்றும் லால்காந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே லால்காந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “உதய கம்மன்பில மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதி என்பதால் இன்று எவரும் அவரது சவால்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
“ஒரு காலகட்டம் இனவாதத்தை ஊக்குவிப்பதற்கும், இன்னொரு காலகட்டம் தீவிரவாதத்தை வளர்ப்பதற்கும், மீண்டும் மதப் பிரிவினையை பரப்புவதற்கும் உழைத்த இவர்களின் நடவடிக்கைகள் இப்போது மக்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த தரப்பினர் போராடினாலும், கூச்சலிடாமல் இருந்தாலும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் புதிய அரசாங்கமும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மத நிறுவனங்களும் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகமும் அந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றன” என்று லால்காந்த கூறினார்.