எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான ஆசன ஒதுக்கீடும், வேட்பாளர் தெரிவும் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது.
இம்முறை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் மிகப் பலவீனமான வேட்பாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள 5 கட்சிகளில் 3 கட்சிகள் கட்டமைப்புகளற்றதாக- அதிலும் ஜனநாயக போராளிகள், தமிழ் தேசிய கட்சி ஆகியன உள்ளூராட்சி தேர்தலில் வட்டாரங்களை வெல்வதே குதிரைக்கொம்பு என்ற நிலையில், அவர்களையும் சமபங்காளிகளாக கருதி, ஆசனப்பகிர்வு மேற்கொள்வதே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் என தமிழ்பக்கம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருந்தது.
நேற்று (5) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடலில் வேட்பாளர் நியமனங்கள் ஆராயப்பட்டது.
இதில், யாழ் மாவட்டத்தில் புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சியென்பன சார்பில் தலா 2 வேட்பாளர்கள் களமிறங்குவதென்றும், ஜனநாயக போராளிகள் தரப்பிலிருந்து ஒருவர் களமிறங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
புளொட் சார்பில், த.சித்தார்த்தன், பா.கஜதீபன் ஆகியோர் களமிறங்கவுள்ளனர். இவர்கள் இருவருமே அந்த கூட்டணியில் அதிக வாக்கு எடுக்கக்கூடியவர்கள்.
ஏனைய யாருமே கூட்டணி வெற்றியீட்டுவதற்கு தேவையான கவர்ச்சியான வாக்கு எண்ணிக்கையை பெறுவது சிரமமானது என கருதப்படுகிறது.
ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் போட்டியிடுவார். கிளிநொச்சியில் வேட்பாளர் ஒருவரை நியமிக்கும் பொறுப்பு ஈ.பி.ஆர்.எல்.எவ் இடம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறான கவர்ச்சியான வேட்பாளர் யாரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இடம் தற்போதைக்கு இல்லை. நல்ல வேட்பாளர் யாரும் இருந்தால் தருமாறு ஏனைய கட்சிகளிடம் ஈ.பி.ஆர்.எல்.எவ் கேட்டது.
ரெலோ சார்பில் சுரேந்திரன் குருசாமி போட்டியிடவுள்ளார். சாவகச்சேரியல் பெண்ணொருவரை நியமிக்கும் பொறுப்பு ரெலோவிடம் வழங்கப்பட்டது.
தமிழ் தேசிய கட்சியின் சார்பில் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனார்த்தனன் இருவரும் போட்டியிடவுள்ளனர். கட்டமைப்புக்கள் ஏதுமற்ற, அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் ஏதுமற்ற தமிழ் தேசிய கட்சி, தனக்கு இரண்டு ஆசனங்களை வழங்க வேண்டுமென விடாப்பிடியாக நின்றது. ஜனார்த்தனன் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாநகரசபையில் போட்டியிட்டு தனது வட்டாரத்தில் 3வதாக வந்தவர். புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென சிறிகாந்தா குறிப்பிட்டு, ஜனார்த்தனனிற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென விடாப்பிடியாக நின்றதால், ஏனைய கட்சிகள் விருப்பமின்றி அதற்கு சம்மதம் தெரிவித்தன.
வன்னி தேர்தல் தொகுதியில், ரெலோ சார்பில் 3 வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். செல்வம் அடைக்கலநாதன், விஜிந்தன் ஆகியோருடன் மற்றொருவரை ரெலோ களமிறக்கும். ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சிவசக்தி ஆனந்தன், மன்னாரை சேர்ந்த ரயன் போட்டியிடவுள்ளனர்.
புளொட் சார்பில் க.சிவநேசன் மற்றும் மன்னாரை சேர்ந்த ஒருவர் போட்டியிடவுள்ளனர்.
ஜனநாயக போராளிகள் சார்பில் துளசி போட்டியிடவுள்ளார். தமிழ் தேசிய கட்சி சார்பில் ஒருவர் போட்டியிடவுள்ளார்.